ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகளை நிராகரிப்பது  நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்லும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்  அறிக்கை


தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றங்கள், மனித உரிமைகள் மீறல், அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை நிராகரிப்பதாகவும் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அனைத்து பரிந்துரைகளையும் நிராகரிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் நாட்டை மேலும் வங்குரோத்து நிலைமைக்கே இட்டுச் செல்லும் என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் 269பேர் கொல்லப்பட்டதுடன் பலநூறுபேர் காயமடைந்துமுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராகவும் இருந்த காலகட்டத்திலேயே இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றன. இக்குண்டுத்தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 45பேரும் கொல்லப்பட்டனர். இதனால் சுற்றுலாத்துறையே பாரிய வீழ்ச்சியடைந்தது. இதன் காரணமாக பலநூறு மில்லியன் ரூபாய் அரசுக்கு இழப்பும் ஏற்பட்டது. உயிர்த்த ஞாயிறு தொடர்பாக சனல்4 வெளியிட்ட ஆவணக் காணொளியை பாதுகாப்பு அமைச்சு முற்றாக நிராகரிப்பதாகக் கூறியுள்ளது.

இந்நிலையில் ஒருபுறம் உயிர்த்த ஞாயிறு கொலைகளை முற்றுமுழுதாக நிராகரிக்கும் ஜனாதிபதி அவர்கள் மறுபுறத்தில் அதற்கான விசாரணை ஆணைக்குழக்களை நியமிப்பது வேடிக்கையாகவும் முரண்நகையாகவும் இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார். விசாரணைகள் என்பது குறகிய அரசியல் இலாபநோக்கங்களுக்காகச் செயற்படுத்தப்படுகிறதா? அல்லது இந்த நாட்டின் கௌரவம் சர்வதேச அளவில் பாதுகாக்கப்படவேண்டும் இந்த நாடு வங்குரொத்து நிலையில் இருந்து மீள்வதற்கு சர்வதேச முதலீடுகள் உள்ளீர்க்கப்படவேண்டும் என்ற விடயத்தையாவது குறைந்த பட்சம் கவனத்தில் எடுத்துக்கொண்டு முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டள்ளது.

ஆகவே நாட்டின் நன்மைகருதியும் பொருளாதார அபிவிருத்தி கருதியும் இவை எல்லாவற்றிற்கும் ஒட்டுமொத்தமான தீர்வைக் காணும்முகமாக சர்வதேச விசாரணை என்பது உறுதிப்படுத்தப்படவேண்டும். ஜனாதிபதியும் அரசாங்கமும் இதனைப் புரிந்துகொண்டு கடமையாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்ட்டள்ளது.