அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைபு நகலைக் கோருகிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.

 

அமைச்சரவையில் அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைபு நகலைக் கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.திருத்தப்பட்ட சட்டமூலத்தின் நகல் கிடைத்தவுடன் அது தொடர்பான மேலதிக அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. என்றாலும், குறித்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டதால் குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்தது.

அதன் பிரகாரம் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அண்மையில் அமைச்சரவையில் அனுமதி அளிக்கப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 திகதி வர்த்தமானியில் வெளியான சட்டமூலத்தின் திருத்தப்பட்ட பதிப்பே தற்போதைய சட்டமூலம் என கருதுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.