வடக்கு ஆளுநரை மாற்றக்கூடாது :  செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள்.


வடக்கு ஆளுநர் துணிச்சலான பெண்மணி, அவர் மாற்றப்படக் கூடாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் ஒருவர் ‘வடக்கு ஆளுனர் விரைவில் மாற்றப்படுவார் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன எனக் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண ஆளுனர் முன்னரும் வடக்கின் ஆளுனராக இருந்த பொழுது சரியாக செயற்பட்டவர்.தற்போதும் அவருடைய செயற்பாடுகள் மிகச் சரியானதாக அமைந்திருக்கின்றது.அவர் மாற்றப்படுகின்ற சூழல் இருக்க முடியாது.

ஏன் எனில் ஒரு பெண்மணி, துணிச்சலாக பல விடயங்களை செய்பவர்.நாங்கள் அவரிடம் சென்று எங்களது கோரிக்கையை முன் வைக்கின்ற போது அவர் தன்னுடைய ஆளுமைக்கு உட்பட்ட விடயங்களை செய்வதற்கு தயங்கமாட்டார்.அந்த வகையில் வந்து சிறிது காலத்தில் மாற்றப்படக் கூடாது. ஏன் அவர் மாற்றப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் சொன்னார் என தெரியவில்லை.ஆனால் நான் அந்த கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.