செப்டெம்பரில் கடும் வெப்பம்! பாரிஸில் 34,6°C

2023 கோடையின் அதி உச்ச அளவு

Kumarathasan Karthigesu-பாரிஸ்

பாரிஸில் இந்த ஆண்டு கோடை காலத்தின் அதி உயர்ந்த வெப்ப நிலை இன்று வெள்ளிக்கிழமை பதிவாகி இருக்கிறது.

இதற்கு முன்னர் தலைநகரில் பதிவான உச்சப் புள்ளிகளைத் தாண்டி இன்றைய வெப்பம் 34,6°C வரை உயர்ந்துள்ளது என்று பாரிஸ் நகரில் மொன்சூரியில் உள்ள (Paris-Montsouris) வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப அனல் இன்று பின்னேரம் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் செப்டெம்பர் மாதத்தில் வழமைக்கு மாறாக அதி கூடிய வெப்பக் காலநிலை நீடிக்கிறது.

ஜூலை, ஓகஸ்ட் மாதங்களுக்குப் பிறகு கடும் வெப்ப அனல் காரணமாகப் பல மாவட்டங்களில் செம்மஞ்சள் எச்சரிக்கை (vigilance orange canicule) விடுக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் மாதத்தில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் தடவை என்று கூறப்படுகிறது. கடும் வெப்பம் காரணமாகத் தலைநகரில் மக்கள் பெரும் அசௌகரியங்களைச் சந்தித்து ள்ளனர். நகரில் உள்ள பூங்காக்களில் சனக்கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

தொடர்ந்து இந்த வார இறுதி வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படினும் அடுத்த வாரம் மழையைத் தொடர்ந்து வெப்பம் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும் என்று எதிர்வு கூறப்படுகிறது.