ஈஸ்டர் தாக்குதல்கள்: சனல்-4 ஆவணப்படம் இன்றிரவு ஒளிபரப்பு

அப்பாவிகளைக் கொன்று அதிகாரத்தைக் கைப்பற்ற திட்டமிட்ட ஒரு தாக்குதலா?

Kumarathasan Karthigesu-பாரிஸ்

சிறிலங்காவில் 2019 ஆம் ஆண்டு உயரத்த ஞாயிறு திருநாளன்று தேவாலயங்களில் தொடராக நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான முக்கிய ஆவணப் படம் ஒன்றை “சனல் – 4” (‘Channel 4’) தொலைக்காட்சி சேவை இன்று செவ்வாய்க்கிழமை பிரித்தானிய நேரப்படி இரவு 23.05 மணிமுதல் ஒளிபரப்புச் செய்யவுள்ளது.

சுமார் 250 க்கும் அதிகமான சிவிலியன்கள்- அவர்களில் பெரும்பாலானோர் கத்தோலிக்கர்களது புனித நாளாகிய ஈஸ்டர் திருநாள் வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்த சிறுபான்மையினத்தவர்கள் – உயிரிழந்த வெடிகுண்டுத் தாக்குதல்கள் சிறிலங்காத் தீவையும் முழு உலக நாடுகளையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தமை தெரிந்ததே. கொழும்பில் பிரபல அந்தோனியார் தேவாலயம் உட்பட ஹொட்டேல் அடங்கலாக முக்கிய சில இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் வெளிநாட்டுப் பிரஜைகள் சிலரும் கொல்லப்பட்டிருந்தனர்.

இங்கிலாந்தைத் தளமாகக் கொண்டியங்குகின்ற “சனல் – 4” தொலைக்காட்சிச் சேவை, உயிரத்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக அதன் பின்னணித் தகவல்களை முக்கிய சாட்சிகள் மூலம் வெளிப்படுத்துகின்ற ஆவணப் படம் ஒன்றைத் தயாரித்துள்ளது. பரபரப்பான சாட்சியங்களை உள்ளடக்கிய அந்த ஆவணப்படமே ஒளிபரப்பாகவுள்ளது. ஏற்கனவே ஒளிபரப்பாகியுள்ள அதன் முன்னோட்டக் காட்சிகள் சில கொழும்பு அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

சிறிலங்காவின் அரசியலில் ராஜபக்க்ஷ குடும்பத்தினருக்கு மிக நெருக்கமாக – ஆதரவாக – இயங்கிய “பிள்ளையான்” எனப்படுகின்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் என்பவரது “தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்” என்ற கட்சியின் ஊடகப் பேச்சாளராக அந்தக்காலத்தில் விளங்கிய ஆஸாத் மௌலானா என்பவர் சனல் – 4 ஆவணப்படத்தில் முக்கிய சாட்சியத்தை வழங்கியுள்ளார்.

அப்பாவிச் சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்த அந்தக் குண்டுத் தாக்குதல்கள் கோட்டாபய ராஜபக்ஷாவை அதிகாரத்துக்குக் கொண்டுவரும் உள்நோக்கத்துடன் திட்டமிடப்பட்டவை என்ற தகவலை ஆஸாத் மௌலானா அந்த ஆவணப் படத்தில் தோன்றி வெளிப்படுத்தி உள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

“Sri Lanka’s Easter Bombings – Dispatches,”

எனப் பெயரிட்ட சனல் 4 ஆவணப்படம் முழுமையாக ஒளிபரப்பாகுவதற்கு முன்பாகவே அதிலிருந்து கசிந்த முன்னோட்டத் தகவல்களின் அடிப்படையில் சர்வதேச விசாரணை ஒன்றை ஆரம்பிக்கத் தயார் என்று சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் இறுதிப் போரில் அரசுப் படைகளால் நடத்தப்பட்ட மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களையும் இன அழிப்புக் காட்சிகளையும் முன்பு ஒரு தடவை இதே சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை தெரிந்ததே.

 

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">