ஆப்கானிஸ்தானை 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது.

ஆசிய கோப்பை தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சயில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 8 விக்கெட் இழப்பிற்கு 291 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் அதிகபட்சமாக 92 ஓட்டங்கள் குவித்தார்.

இதனை தொடர்ந்து 292 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ரன் ரேட் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் அணி 37.1 ஓவரில் வெற்றி இலக்கான 292 ஓட்டங்கள் எடுத்தால் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழையலாம். ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் வெற்றி இலக்கை எட்டவில்லை என்றால் இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழையும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இரு அணிகளும் ஆடின. ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி அதிரடியாக ஆடி 65 ஓட்டங்கள் குவித்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் 37.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ஓட்டங்கள் எடுத்தது.

இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை திரில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. அதேவேளை, இலங்கையுடனான தோல்வியையடுத்து ஆசிய கோப்பை தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் வெளியேறியது.