காபோன் நாட்டில் 55 வருடம் நீடித்த குடும்ப ஆட்சி கவிழ்ந்தது!!

 

Kumarathasan Karthigesu-பாரிஸ்

அதிகாரம் ராணுவம் வசம் அதிர்கின்றது ஆபிரிக்கா!!

பிரெஞ்சுக் கொலனிகளில் அடுத்தடுத்துப் புரட்சிகள்!!!

நைகர் நாட்டின் அதிபர் பதவி கவிழ்க்கப்பட்டு ஐந்து வாரங்களுக்குள் மற்றும் ஓர் ஆபிரிக்க நாட்டின் ஆட்சியை இராணுவம் திடீரெனக் கைப்பற்றியிருக்கின்றது.

வெவ்வேறு காரணங்கள் இருந்தாலும் ஆபிரிக்க நாடுகளில் அடுத்தடுத்து இடம்பெற்று வருகின்ற ஆட்சிக் கவிழ்ப்புகள் அங்கு மேற்குலகினது செல்வாக்கு வீழ்ச்சியடைவதையே காட்டுகின்றது என்கின்றனர் சில அவதானிகள்.

ஒரே குடும்ப ஆட்சிக்குப் பெயர் பெற்று விளங்கிய காபோன் (Gabon) நாட்டின் அதிகாரத்தை இராணுவக் குழு ஒன்று தன்வசப்படுத்தி உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அதிபர் அலி போங்கோ (Ali Bongo) இராணுவத்தினால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

2009 முதல் பதவியில் நீடித்து வருகின்ற அலி போங்கோ மீண்டும் மூன்றாவது தவணைக் காலத்துக்கு அதிபராகத் தெரிவாகியுள்ளார் என்ற அறிவிப்பு நேற்றுப் புதன்கிழமை வெளியான கையோடு அரச தொலைக்காட்சியில் தோன்றிய நாட்டின் மூத்த படை அதிகாரிகள் குழு ஒன்று, தாங்கள் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதாகவும் தேர்தல் முடிவுகள் ரத்துச் செய்யப்படுவதாகவும்  அறிவித்திருக்கிறது. காபோன் இராணுவத்தின் உயர்மட்டப் படைப் பிரிவாகிய குடியரசுக் காவல் படையின் கட்டளைத் தளபதி ஜெனரல் பிரைஸ் ஒலிகுய் நுகுமா (General Brice Oligui Nguema) நாட்டின் இடைக்கால அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு அங்கு தேசிய அளவில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

படம் :தந்தையும் மகனும் – பொங்கோ குடும்பம் – – – – – – – – – – – – – – – –

காபோன் நாட்டில் நிலவிய நீண்ட குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதைக் குறிக்கின்ற இந்த நிகழ்வுகளை நாடெங்கும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து

கொண்டாடிவருகின்றனர் என்று தலைநகர் லிப்ரெவீலில் (Libreville) இருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. “ஒரு தற்காலிக விடுதலை உணர்வு தென்படுகின்ற போதிலும் ஜனநாயக சுதந்திரம் கேள்விக்குள்ளாகி இருக்கிறது” – என்று அங்குள்ள சர்வதேச செய்தியாளர் ஒருவர் எழுதியுள்ளார்.

????அதிகாரத்தில் நீடித்த தந்தையும் மகனும்…

பிரெஞ்சு மொழி பேசும் காபோன் மத்திய ஆபிரிக்காவில் அத்திலாந்திக் சமுத்திரத்தை எல்லையாகக் கொண்டு அமைந்த ஆபிரிக்காவின் செல்வந்த நாடு. அதேசமயம் எண்ணெய் மற்றும் கனிய வளங்கள், காடுகள் நிறைந்த செழிப்பான தேசம். உலகின் எண்ணெய் வள நாடுகளது கூட்டமைப்பான ஒபேக்கின் ஓர் உறுப்பு நாடாகவும் அது விளங்குகின்றது .

நீண்ட காலமாகப் பிரான்ஸின் கொலனித்துவ நிர்வாகத்தின் கீழ் இருந்து வந்த காபோன் 1960 இல் சுதந்திர நாடாகப் பிரிந்தது. அதன் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து அங்கு அதிகாரத்துக்கு வந்தார் ஒமர் பொங்கோ (Omar Bongo).

அலி பொங்கோவின் தந்தையாராகிய ஒமர் பொங்கோ, காபோன் நாட்டின் எண்ணெய் வளங்களில் இருந்து கிடைத்த செல்வங்கள் மூலம் உலகின் முதல்தர செல்வந்தர்களில் ஒருவராக விளங்கினார். மக்கள் கிளர்ச்சியை அடுத்து 1990 இல் நாட்டைப் பல கட்சி அரசியல் முறைமைக்கு மாற்றி அறிமுகம் செய்தார். அதன் பிறகு1993- 2005 இடையே மூன்று தடவைகள் நடந்த வன்செயல்கள் நிறைந்த தேர்தல்களில் வென்று தொடர்ந்து 42 வருடங்கள் ஆட்சியில் நீடித்தார். 2009 இல் அவர் உயிரிழந்ததை அடுத்து நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சியாகிய காபோன் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அலி பொங்கோ அதிபராகத் தெரிவாகி ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்தார்.

Photo :Reuters screen shot —

காபோன் குடிமக்களது வாழ்நாள் இவ்வாறு தந்தை-மகன் பிடியில் பொங்கோ குடும்பத்தின் ஆட்சியின் கீழேயே கழிந்தது. மக்கள் மத்தியில் நீண்ட நெடிய குடும்ப ஆட்சி மீது வளர்ந்து வந்த உச்சபட்ச வெறுப்பின் விளைவே தற்போதைய இராணுவச் சதிப் புரட்சிக்கான மூலகாரணமாகப் பார்க்கப்படுகிறது.

தந்தையார் ஒமர் பொங்கோவின் சகாப்த காலம் பிராங்கோ-ஆபிரிக்க உறவின் பொற்காலமாக விளங்கியது. ஆபிரிக்காவின் உப சஹாரா மண்டலத்தில் பிரான்ஸ் மிகுந்த செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்தி வைத்திருந்தமைக்கு அவரே வழிகோலினார். ஆனால் சமீப காலமாக மகன் அலி பொங்கோ பாரிஸுடனான உறவில் இருந்து விலகிப் புதிய பங்காளிகளை நாடிச் செல்லுகின்ற போக்கைக் கடைப்பிடித்து வந்தார். காபோனில் சீனாவின் முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியிருந்தன.

காபோனில் பிரான்ஸின் சில பெரு நிறுவனங்கள் கனியவள அகழ்வு உட்படப் பல்வேறு வணிகத் தொழில் துறைகளில் ஈடுபட்டுவருகின்றன. தற்போதைய இராணுவப் புரட்சி அவற்றின் செயற்பாடுகளைச் ஸ்தம்பிதமடையச்செய்துள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">