பாரிஸ் கணேசா தேர்ப் பவனியில் தமிழர்கள் திரள்வு.

 

Kumarathasan Karthigesu-பாரிஸ்

பாரிஸில் சற்று மப்பும் மந்தாரமுமான காலநிலைக்கு மத்தியில் இன்று பகல் நடைபெற்ற மாணிக்கப் பிள்ளையார் ஆலயத் தேர்த் திருவிழாவில் (கணேசா விழா) பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் வெளிநாட்டவர்களும் திரண்டிருந்தனர்.

காவடிகள், பஜனைக் குழுக்கள், மங்கள வாத்தியங்கள், கண்கவர் குடை கொடி ஆலவட்டங்கள் சகிதம் தேர்கள் வீதிகளில் பவனி வந்த கண்கவர் காட்சி காண மக்கள் கூட்டம் அலைமோதியது. இல்-து-பிரான்ஸ் பிராந்தியத்தின் பல இடங்களிலும் இருந்தும் ஏனைய பல ஐரோப்பிய அயல் நாடுகளில் இருந்தும் பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் தேர்த்திருவிழா காண வந்திருந்தனர்.

தேர்த் திருவிழாவை ஒட்டி La Chapelle மற்றும் Gare du Nord பகுதிகளில் வீதிகள் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தன. இசைக் கச்சேரிகள், வர்த்தக விளம்பர அரங்குகள், மலிவு விற்பனைக் கடைகள், தாகசாந்தி மையங்கள், உணவகங்களின் விசேட வெளி இருக்கைகள் என்று வழக்கமான பல அம்சங்கள் La Chapelle வீதிகளை நிறைத்திருந்தன.

தேர்ப் பவனி சென்ற தடங்களில் பக்தர்களால் ஆயிரக்கணக்கான தேங்காய்கள் உடைக்கப்பட்டன.

“சிதறுகின்ற தேங்காய் உலக வாழ்வின் மாயையைக் குறிக்கிறது. அதன் உள் சதைப் பகுதி தனிமனித கர்மாவையும் அதிலிருந்து வெளியேறுகின்ற இளநீர் மனித ஆணவத்தையும் சுட்டுகிறது” – என்ற தத்துவத்தைப் பாரிஸ் செய்தி ஊடகங்கள் சில வெளியிட்டிருந்த தேர்த் திருவிழா பற்றிய செய்திகளில் காணமுடிந்தது.

இன்றைய தேர்த் திருவிழாவில் சுமார் 50 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்வர் என்று பாரிஸ் நகரசபை மதிப்பிட்டிருந்தது. திருவிழாப் பகுதிகளில் முக்கிய வீதிகள் அனைத்திலும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது.

????நாடெங்கும் வெப்பம் தணிவு

இதேவேளை – பிரிட்டிஷ் தீவுகளில் உருவாகி இருந்த தாழ் அமுக்கம் அங்கிருந்து மேற்கு நோக்கி நகர்ந்துள்ளதால் பிரான்ஸின் பெரும் பிரதேசத்தை வாட்டிய அனல் வெப்பம் தணிந்துள்ளது. வெப்ப நிலை 40 பாகையைத் தாண்டி உயர்ந்து காணப்பட்ட சில மாவட்டங்களில் கடந்த 48 மணிநேரத்தில் அதன் அளவு திடீரென அரைவாசியாகக் குறைந்துள்ளது.

பிரிட்டிஷ் பிராந்தியத்தில் ஏற்பட்டிருந்த தாழ் அமுக்கத்தினால் மத்தியதரைக் கடலில் இருந்து வெளியேறிய வெப்பக் காற்று பிரான்ஸின் வான் மண்டலத்தில் பெரும் வெப்ப வலயம் ஒன்றை – வெப்பக் குவிமாடம் ஒன்றை (heat dome)– உருவாக்கி இருந்தது. அதனால் ஏற்பட்ட அதி உச்ச வெப்பம் கடந்த சில நாட்களாக நாடெங்கும் மக்களது இயல்பு வாழ்வைப் பெரிதும் பாதித்திருந்தது. தற்சமயம் வெப்பம் தணிந்துள்ள போதிலும் வெப்பத்துக்குப் பின்னர் திடீரெனக் கடும் காற்றுடன் கொட்டுகின்ற ஆலங்கட்டி மழை பல இடங்களிலும் பெய்து வருகிறது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">