பாடசாலைகளில் முழு நீள ஆடை அணியத் தடை!
கல்வி அமைச்சர் அறிவிப்பு
Photo MAXPPP——————–
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பிரான்ஸில் பாடசாலைகள், கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் உடலை முழுமையாக மறைக்கின்ற – மத அடையாளத்தை வெளிப்படுத்துகின்ற- ஆடைகளை அணிவது முற்றாகத் தடைசெய்யப்படும் என்று புதிய கல்வி அமைச்சர் கப்ரியேல் அட்டால் அறிவித்திருக்கிறார்.
புதிய கல்வி ஆண்டுக்காக பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தத் தடை தேசிய அளவில் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். “நீங்கள் ஒரு வகுப்பறைக்குள் நுழைகின்ற போது உங்கள் பார்வையில் மாணவர்களை அவர்களது மதத்தால் அடையாளங்காணுகின்ற நிலை இருக்கக் கூடாது- என்று அமைச்சர் அட்டால், TF1 தொலைக்காட்சி செவ்வியில் கூறினார்.
முஸ்லிம் மதப் பெண்கள் அணிகின்ற “அபாயா” (abaya) என்கின்ற உடலை முழுமையாக மறைக்கின்ற ஆடையை இலக்காகக் கொண்டே இந்தத் தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சரது இந்த நிலைப்பாட்டை அரசாங்கப் பேச்சாளர் ஒலிவியே வேரன் ஆதரித்துள்ளார். “பாடசாலைகள் மதசார்பின்மையின் கோவில்கள்” என்று அவர் கருத்துக் கூறியிருக்கிறார்.
கோடைகால விடுமுறைக்குப் பின்னர் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ள சமயத்தில் கல்வி அமைச்சர் விடுத்திருக்கும் இந்த அறிவிப்பு சர்ச்சைக்குரிய இந்த விவகாரம் மீது புதிதாக விமர்சனங்களைக் கிளப்பி உள்ளது.
அபாயாவைத் தடை செய்வதை வலதுசாரிகள் எப்போதும் ஆதரித்தே வருகின்றனர். இடதுசாரி எம்பிக்கள் அதனை எதிர்த்துக் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
சமீப காலமாக வகுப்பறைகளில் மதசார்பின்மை மீதான தாக்குதல்கள், எதிர்ப்புகள் அதிகரித்துவருவதை அவை தொடர்பான சம்பவங்களின் பதிவுகள் வெளிப்படுத்தி உள்ளன.
பிரான்ஸில் மார்ச் 15,2004 ஆம் ஆண்டின் சட்டவிதிகளின் கீழ் “அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்கள் வெளித்தோற்றத்தில் மதத் தொடர்பைக் காட்டும் அடையாளங்கள் அல்லது ஆடைகளை அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது”.