வெப்ப அனலின் ஆபத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள்!
Kumarathasan Karthigesu-பாரிஸ்
நாட்டு மக்களுக்கு அரசு ஆலோசனை.
நான்கு மாவட்டங்களில் சிவப்புக்குறி எச்சரிக்கை
நாட்டில் நிலவுகின்ற அனல் பறக்கும் வெப்பக் காலநிலை மனிதர்களில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் குறித்துக் கவனம் செலுத்துமாறு அரசு மக்களைக் கேட்டிருக்கிறது.
பாரிஸ் பிராந்தியம் உட்பட வட பகுதி மாவட்டங்களில் ஓரளவு தணிவான வெப்ப நிலை காணப்பட்டாலும் தென் கிழக்கு, தெற்கு, தென்மேற்குப் பகுதிகளைக் கடும் வெப்பம் வறுத்தெடுத்துவருகிறது.
நாட்டில் வெப்பம் அதிகரித்துக் காணப்படுகின்ற 49 மாவட்டங்களில் ஏற்கனவே செம்மஞ்சள் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலாக வேறு நான்கு மாவட்டங்களில் (Rhône, Drôme, Ardèche, Haute-Loire) நாளை செவ்வாய்க்கிழமை சிவப்பு எச்சரிக்கை (Vigilance Rouge) விடுக்கப்படவுள்ளது. காலநிலை அனர்த்த அளவுகளைக் குறிக்கின்ற எச்சரிக்கைக் குறியீடுகளில் ஆகக் கூடிய நிலை சிவப்பு எச்சரிக்கை ஆகும். சிவப்புக் குறியீட்டின் கீழ் வரவுள்ள இந்த நான்கு மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் அரசு அதிகாரிகளது ஆலோசனைகளைப் பின்பற்றி நடக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களது கேள்விகளுக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் ஒறேலின் ரூசோ (Aurélien Rousseau), வெப்ப அலையின் ஆபத்தைப் பொதுமக்கள் கவனத்தில் எடுக்க வேண்டும் – என்று கேட்டுக் கொண்டார்.
அதிக வெப்பத்தால் உடலில் ஏற்படக் கூடிய ஆரோக்கியப் பாதிப்புகளைக்- குறிப்பாக வெப்பப் பக்க வாதத்தைத் – தவிர்ப்பதற்கான செயல்முறைகள் அடங்கிய விழிப்புக் கையேடுகளை அரசு வெளியிட்டுள்ளது. மூதாளர் இல்லங்களில் உள்ள வயதானவர்கள், குழந்தைகள், உடற் பலவீனமான நோயாளிகள் மற்றும் வீட்டுவளர்ப்பு விலங்குகளை வெப்ப அனலில் இருந்து பாதுகாக்கும் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தாகம் இல்லாவிடினும் அடிக்கடித் தண்ணீர் அருந்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். பியர் போன்ற குளிர்ந்த மதுபானங்கள் வெக்கைக்கு இதமாகத் தெரிந்தாலும் தற்போதைய கால நிலையில் மதுவகைகளை அருந்துவது வெப்பப் பக்க வாதத்தைத் (heatstroke) தூண்டலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் மாவட்டங்களில் வெளிப்புற நடை மற்றும் உடற்பயிற்சிகளைத் தவிர்க்குமாறு உள்துறை அமைச்சு கேட்டுள்ளது. – – – – – – – – – – – – –
தற்போதைய வெப்ப நிலை இதற்கு முன்பு அதி உச்ச வெப்ப நிலை என்று கடந்த காலங்களில் பதிவாகிய அளவுகள் அனைத்தையும் தாண்டி முன்னேறிப் புதிய புள்ளிகளைத் தொட்டுள்ளது. நாட்டின் ஒக்சிட்டானி மற்றும் றோஹ்ன் (L’Occitanie et la vallée du Rhône) ஆகிய பிராந்தியங்களில் உள்ளூர் மட்டத்தில் வெப்ப நிலை 42°C அளவைக் கடந்துள்ளது.