பிறந்த சிசுக்களைத் தொடராகக் கொன்ற இங்கிலாந்து தாதிக்கு ஆயுள் சிறை!

Kumarathasan Karthigesu-பாரிஸ்

நாட்டை அதிர வைத்த குற்ற வழக்கில் தீர்ப்பு

இங்கிலாந்தில் மிக முக்கியமான தொடர் கொலை வழக்கு ஒன்றில் லூசி லெட்பி (Lucy Letby) என்ற 33 வயதுப் பெண்ணுக்கு அங்கு மிக அரிதாக விதிக்கப்படுகின்ற ஆயுள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. நாட்டின் சட்டங்களின் படி அது மரண தண்டனைக்கு ஒப்பானதாகும்.

மருத்துவமனை ஒன்றின் மகப்பேற்றுப் பிரிவில் குறிக்கப்பட்ட காலப்பகுதி ஒன்றில் பிறந்த பல குழந்தைகள் அடுத்தடுத்துக் காரணம் தெரியாமல் உயிரிழந்தும் உணர்விழந்தும் போன சம்பவங்கள் தொடர்பான செய்திகள் 2015-2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. செஸ்டர் என்ற ஒரே மருத்துவமனையில் (Chester Hospital) சிசுக்களைப் பராமரிக்கின்ற பிரிவில் வரிசையாக ஏழு குழந்தைகள் உயிரிழந்திருந்தன. ஆரோக்கியமான நிலையில் பிறந்த மேலும் ஆறு குழந்தைகள் திடீர் திடீரென உணர்விழந்து நோய்வாய்ப்பட்டன.

அங்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்று உயிரிழந்தது. அடுத்தது சுயநினைவிழந்தது. குழந்தைகளது உயிரிழப்புகளுக்கோ அன்றிப் பாதிப்புகளுக்கோ வெளித் தெரியத்தக்க காரணங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

லிவர்பூலில் இடம்பெற்ற இந்த மரணங்கள் ஆரம்பத்தில் சாதாரண இறப்புகள் என்றே பதிவாகின. ஆனால் இறப்பு வீதம் எதிர்பாராத வகையில் திடீரென அதிகரித்ததைக் கண்காணித்த அதிகாரிகள் ஆஸ்பத்திரி நிர்வாகத்துடன் தொடர்ச்சியான ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.

குழந்தைகள் உயிரிழந்த மற்றும் திடீரென நினைவிழந்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும் லூசி லெட்பியே அவர்களுக்கு அருகே பிரசன்னமாகி இருந்திருப்பது கவனத்தைப் பெற்றது. ஆனால் அவரைப் பணி மாற்றம் செய்யுமாறு ஆலோசனைச் சபையினரால் விடுக்கப்பட்ட சிபாரிசுகளை ஆஸ்பத்திரி நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை.

விசாரணைகள் மருத்துவ மட்டத்தில் இருந்து பொலீஸாரின் பொறுப்புக்கு மாறியபிறகே லூசி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டார்.

விசாரணைகளுக்குப் பின் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் ஜூன் 2019 இலும் மீண்டும் நவம்பர் 2020 இலும் கைதுசெய்யப்பட்டார். இரண்டாவது தடவை கைதாகிய போது அவர் மீது எட்டுக் கொலைக் குற்றங்களும் பத்துக் கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. லூசி முதல்தடவை கைது செய்யப்பட்ட வீட்டில் பின்னர் நடத்தப்பட்ட தேடுதலில் மீட்கப்பட்ட டயறிக் குறிப்பு ஒன்றே அவர் புரிந்த குற்றங்களுக்கான முக்கிய தடயமாக மாறியது. அதில் அவர் “நான் ஒரு பிசாசு, நானே இதைச் செய்தேன்” (‘I AM EVIL, I DID THIS) என்று எழுதியிருந்தார்.

சுமார் 12 மாத காலப்பகுதியில் அவர் தனது பராமரிப்பில் இருந்த சிசுக்களை ஊசி மூலம் காற்றைச் செலுத்தியும் மருத்துவ உபகரணங்களால் தாக்கியும் இன்சுலின் ஏற்றியும் அளவுக்கு அதிகமாகப் பால் பருக்கியும் கொன்றும் கொலை முயற்சி செய்தும் வந்தமை விசாரணைகளில் தெரியவந்தபோது மருத்துவ உலகம் மட்டுமன்றி முழு நாடுமே அதிர்ச்சியில் உறைந்தது.

லூசி முறைப்படியான கல்வி மற்றும் தகைமைகளுடன் ‘பிறந்த குழந்தைப் பராமரிப்புத் தாதியாக’ (neonatal nurse) 2012 இல் செஸ்டர் மருத்துவமனையில் பணிக்குச் சேர்ந்திருந்தார். ஆதரவு தேவையான குழந்தைகளைப் பரந்த அளவில் பராமரிப்பதும் அவர்களது முன்னேற்றங்களைக் கண்காணிப்பதும் பெற்றவர்களுக்கு ஆதரவாக இருப்பதும் அவரது பதவியின் பொறுப்புக்களாக இருந்தன. அப் பணியினை அவர் மனநிறைவோடு செய்து வந்தார் என்றே அவரது மருத்துவத்துறை நண்பர்கள் கூறுகின்றனர். அவ்வாறாயின் ஏன் எதற்காக அவர் குழந்தைகளைத் தொடராகக் கொன்றார்?

குழந்தைகளைக் கொல்வதில் அவர் “ஒரு சிலிர்ப்பை அனுபவித்தார்” (“getting a thrill”) என்பதைத் தவிர வேறு காரணங்கள் எதனையும் விசாரணையாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மனித மனப்பிறழ்வுகளுக்குப் பின்னால் உள்ள நுண்ணிய காரணங்கள் என்றைக்குமே புலன் விசாரணைக் கண்களுக்கு எட்ட முடியாதவை என்பதையே லூசி விவகாரமும் உணர்த்திச் செல்கிறது  என்கின்றனர் உளவியலாளர்கள்.

தனது 25 ஆவது வயதில் படுபாதகக் கொலைகளைப் புரிந்ததன் மூலம் நவீன இங்கிலாந்து வரலாற்றில் மிகக் கொடூரமான “தொடர் கொலைகாரி” என்ற பெயரைச் சம்பாதித்த அவருக்குவழங்கப்பட்டிருக்கின்றன அதி உச்சத் தண்டனை, அவர் பரோலில் வெளிவர முடியாத ஆயுள் தீர்ப்பு என்பதால் தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் அவர் சிறையிலேயே கழிக்கவேண்டி இருக்கும்.

உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளது பெற்றோர்கள் கண்ணீர் மல்க நிறைந்திருந்த நீதிமன்ற அறையில் நீதிபதி தீர்ப்பை அறிவித்த சமயத்தில் லூசி லெட்பி அங்கு சமூகமளித்திருக்கவில்லை. தீர்ப்பு வழங்கப்படுகின்ற சமயத்தில் குற்றமிழைத்தோர் மன்றுகளில் சமூகமளித்திருக்கவேண்டும் என்பது பிரிட்டிஷ் நீதிச் சட்டங்களில் கட்டாயமாக்கப்படவில்லை. இவ்வாறு குற்றவாளிகள் சமூகமளிக்காத நிலையில் தீர்ப்பை வழங்குகின்ற சட்ட ஏற்பாட்டை மாற்றி அமைக்கப்போவதாகப் பிரதமர் ரிஷி சுனாக் தெரிவித்திருக்கிறார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">