வாக்னர் படைத் தலைவர் ப்ரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்தார்?
புடினை எதிர்த்தவரது சரித்திரம் முடிந்ததா?
Kumarathasan Karthigesu-பாரிஸ்
அண்மையில் ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து புரட்சிசெய்து தோல்வியடைந்த வாக்னர் தனியார் படையணியின் தலைவரும் ஸ்தாபகருமாகிய எவ்ஜெனி ப்ரிகோஜின் (Yevgeny Prigozhin) விமான விபத்தொன்றில் உயிரிழந்தார் என்று அறிவிக்கப்படுகிறது.
குறைந்தது பத்துப் பேருடன் வெடித்துச் சிதறிய தனியார் விமானம் ஒன்றில் பயணித்தவர்களது பட்டியலில் ப்ரிகோஜினின் பெயரும் இடம்பெற்றிருப்பதை ரஷ்யாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை உறுதி செய்திருக்கிறது. எனினும் அவர் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இன்னமும் கிடைக்கவில்லை.
மொஸ்கோவில் இருந்து சென். பீற்றர்ஸ்பேர்கிற்குப் பறந்துகொண்டிருந்த அந்தச் சிறிய விமானத்தில் ஏழு பயணிகளும் மூன்று விமானிகளும் இருந்துள்ளனர்.
விமான விபத்துக்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. அது மொஸ்கோ அருகே ரீவர் என்ற பிராந்தியத்துக்கு (Tver region) மேலே வைத்து வான் பாதுகாப்புச் சாதனங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று வாக்னர் படையுடன் தொடர்புடைய ரெலிகிராம் செய்திச் சனல் ஒன்று முன்னதாகத் தெரிவித்திருந்தது.
சுமார் அரை மணிநேரம் பறந்துகொண்டிருந்த அந்த விமானம் தரையில் மோதி வீழ்ந்து தீப்பற்றியதாகவும் சிதைவுகளில் இருந்து இதுவரை நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் ரஷ்ய செய்தி நிறுவனமாகிய டாஸ் (Tass) தெரிவித்திருக்கிறது. விமானம் வீழ்ந்து நொருங்குகின்ற வீடியோ ஒன்றை ரொய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பாக ப்ரிகோஜின் பாலைவனம் போன்ற ஒரு பகுதியில் சீருடை அணிந்து ஆயுதத்துடன் தோன்றுகின்ற வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. கடந்த ஜூனில் அதிபர் புடினுக்கு எதிராகத் திடீரென அவர் நிகழ்த்திய புரட்சி தோல்வியடைந்த பின்னர் இவ்வாறு வெளியாகிய முதலாவது வீடியோ அதுவாகும். அது ஆபிரிக்க நாடொன்றில் பதிவானது என்பதை அவரே அதில் கூறியிருந்தார்.
நீண்ட காலம் அதிபர் புடினுக்கு மிக நெருக்கமானவராக இருந்து திடீரென அவரது கிரெம்ளின் அதிகாரத்தையே ஆட்டங்காணச் செய்ய முயன்றவரான ப்ரிகோஜினை புடின் உயிருடன் விட்டுவைக்க மாட்டார். ப்ரிகோஜினின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று சிஐஏ உட்பட மேற்குலக உளவு அமைப்பகள் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.