ப்ரிகோஜினுக்கு புடின் அனுதாபம்.
“பெரும் தவறுகள் இழைத்த திறமைசாலி” என்கிறார்.. விமானத்தை வீழ்த்தியது குண்டா ? ஏவுகணையா?
புதன் இரவு ப்ரிகோஜின் பயணித்த விமானம் வீழ்ந்து நொருங்கிய பிறகு அவரது மறைவு தொடர்பாகப் புடின் உடனடியாகக் கருத்து எதனையும் வெளியிடவில்லை. விமானம் வீழ்ந்து நொறுங்கிக் கிட்டத்தட்ட 24 மணிநேரம் கடந்த பின்னரே நேற்று மாலை அவர் தனது மௌனத்தைக் கலைத்து உயிரிழந்த பத்துப் பேரது குடும்பத்தினருக்கும் அனுதாபம் தெரிவிக்கும் செய்தியைத் தொலைக்காட்சி வாயிலாக வெளியிட்டிருக்கிறார்.
விமானத்தில் பயணம் செய்தவர்களை “வாக்னர் பணியாளர்கள்” என்று குறிப்பிட்ட புடின், ப்ரிகோஜினின் உயிரிழந்ததைத் தனது வார்த்தைகளில் நேரடியாக உறுதிப்படுத்தவில்லை. “உயிரிழந்த பத்துப் பேரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்” – என்று மட்டும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அதேசமயம் ப்ரிகோஜின் பற்றிய தனது நினைவுகளை வெளியிட்ட அவர் “திறமைசாலியான ஒரு தொழில் அதிபர்” – என்று ப்ரிகோஜினை வர்ணனை செய்தார்.” 1990 களின் முற்பகுதியில் இருந்து நான் ப்ரிகோஜினை அறிவேன். அவர் கடினமான தலைவிதி கொண்ட ஒரு மனிதர், வாழ்க்கையில் பெரும் தவறுகளைச் செய்தார், ஆனாலும் அவர் விரும்பிய இலக்குகளை அடைந்தார்..” – என்றும் புடின் கூறியிருக்கிறார்.
விமான விபத்துத் தொடர்பான விசாரணைகள் இறுதி முடிவை எட்டும் வரை நடத்தப்படும். அதற்கு நீண்ட காலம் எடுக்கலாம் என்றும் புடின் தெரிவித்துள்ளார்.
Photo :AP சென் பீற்றர்ஸ்பேர்கில் அமைந்துள்ள முன்னாள் வாக்னர் நிலையத்தில் ப்ரிகோஜினின் ஆதரவாளர்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விமானம் தரையில் இருந்து ஏவப்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகணையால் சுடப்பட்டிருப்பதற்கான சாத்தியங்கள் தென்படவில்லை என்று அமெரிக்காவின் பென்ரகன் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். விமானத்தின் உள்ளே கழிவறை அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டே விமானத்தை வீழ்த்தியது என்றும் விமானத்தில் இருந்த வைன் போத்தல்களில் குண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்றும் சந்தேகத் தகவல்களை ரெலிகிராம் செய்திச் சனல்கள் வெளியிட்டு வருகின்றன.
அதேசமயம், உயிரிழந்த பணிப் பெண் கிறிஸ்டினா ரஸ்போபோவா, (வயது 39) (Kristina Raspopova) என்பவர் விமானத்தில் உணவு அருந்தும் படம் ஒன்றைத் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
“விமானம் ‘பழுதுபார்க்கப்படுகிறது’ அதனால் பயணம் தாமதமாகிறது என்ற தகவலையும் அவர் உறவினர்களிடம் கூறியிருக்கிறார்.
2014 இல் வாக்னர் தனியார் படையை ஸ்தாபித்தவர் ப்ரிகோஜின். உக்ரைன் போர்க் களத்தில் அவரது படைகள் ஈட்டிய குறிப்பிடத்தக்க வெற்றிகளைத் தொடர்ந்தே-மிகச் சமீப காலத்திலேயே சர்வதேச ரீதியாக அறியப்படலானார்.
ரஷ்யர்கள் மத்தியில் தேசிய வீரர் என்ற நிலையை எட்டிய ஒரு சமயத்திலேயே மொஸ்கோவின் பாதுகாப்புத் துறைத் தலைமைக்கு எதிராகத் தனது வீரர்களுடன் திடீரெனப் புரட்சிகரப் பயணம் ஒன்றை முன்னெடுத்திருந்தார். புடினின் அதிகாரத்தைச் சவாலுக்கு உட்படுத்திய அவரது அந்தத் துணிச்சல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அந்த சதிப் புரட்சியில் அவர் தோல்வி கண்டார்.
தனது அதிகாரத்துக்கு எதிராகக் கிளர்ந்ததன் மூலம் ப்ரிகோஜின் முதுகில் குத்தி விட்டார் என்று புடின் அச்சமயம் குற்றம் சுமத்தியிருந்தார். அதற்காக ப்ரிகோஜின் தண்டிக்கப்படுவார் என்றும் அவர் அறிவித்தார். பின்னர் பெலாரஸ் நாட்டு அதிபரது சமரச முயற்சியின் பலனாக வாக்னர் படைகள் மொஸ்கோ நோக்கிய படையடுப்பை இடைநிறுத்திவிட்டுத் தளங்களுக்குத் திரும்பியிருந்தன. ஓர் உடன்பாட்டின் அடிப்படையில் வாக்னர் படைவீரர்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறி பெலாரஸ் நாட்டில் போலந்து எல்லையோரமாக நிறுவப்பட்ட தங்களுக்குச் சென்று தங்கியுள்ளனர்.
தங்களது தலைவரது மரணத்தை அடுத்து அதற்குப் பழிவாங்குவதற்காக அங்கிருந்து மொஸ்கோ நோக்கிப் படையெடுத்துச் செல்ல அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர் என்று உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன.