ரஷ்ய விண்கலம் சந்திரனில் மோதி வெடித்தது!
Kumarathasan Karthigesu-பாரிஸ்
நிலவின் தென் துருவத்தில் இறங்கும் முயற்சி தோல்வி அடுத்துத் தரையிறங்க தயாராகின்றது “விக்ரம்”
ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகிய ரோஸ்கோஸ்மோஸ் (Roscosmos) இதனை இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருக்கிறது. லூனா விண்கலத்துடனான தொடர்புகள் சனிக்கிழமை ரஷ்ய நேரப்படி 14:57 மணியுடன் (11:57 GMT) துண்டிக்கப்பட்டுவிட்டதாக அது தெரிவித்தது. சந்திரச் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாகப் பிரவேசித்த விண்கலம் தரையிறங்குவதற்காகப்படிப்படியாகக் கீழிறங்கிய சமயத்திலேயே அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.”சந்திரனின் மேற்பரப்பில் மோதியதன் விளைவாக அதன் பயணம் நின்றுபோனது”-என்று ரோஸ்கோஸ்மோஸ் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரஷ்யா கடந்த 50 ஆண்டுகளில் சந்திரனுக்கு மேற்கொண்ட முதலாவது விண்வெளிப் பயணம் இதுவாகும். அத்துடன் சந்திரனின் தென் துருவப் பகுதியில் தரையிறங்க மனிதன் மேற்கொண்ட முதலாவது முயற்சியும் இதுவேயாகும். சந்திரனில் பெருமளவில் அறியப்படாத அதன் தென் பகுதியில் உறைந்த நீரும் பல விலைமதிப்பற்ற மூலக் கூறுகளும் இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் நம்புகின்றனர். ரஷ்ய விண்கலம் அங்கு தரையிறங்கியிருப்பின் வரலாற்றில் அது ஓர் முக்கிய சாதனையாகப் பதிவாகி இருந்திருக்கும்.
ரஷ்யா சோவியத் ஜூனியனாக இணைந்திருந்த காலத்தில் 1976 இல் அது சந்திரனுக்கு அனுப்பிய லூனா – 24 விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி இருந்தது.
மேற்கு நாடுகளால் பெரிதும் ஆர்வம் காட்டப்படாமல் விடப்பட்டிருக்கின்ற நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கும் முயற்சிகளில் ரஷ்யா, இந்தியா, சீனா போன்றவை தமக்குள் கடும் போட்டி போட்டு வருகின்றன.
இந்தியா நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்கின்ற ரோபோ இயந்திரத்துடன் கூடிய “சந்திராயன்-3 “ என்ற விண்கலத்தை ஏற்கனவே ஏவியுள்ளது. அதன் ஒரு பகுதியான “விக்ரம்”(Vikram) என்ற ரோபோ ஆய்வு ஓடம் எதிர்வரும் 23 ஆம் திகதி புதன்கிழமை தென் துருவப் பகுதியில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் விண்கலம் ஒன்று கடந்த சில ஆண்டுகளாக நிலவின் பூமிக்குத் தெரியாத இருண்ட மறு பக்கத்தில் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ளது.