சமஷ்டி அடிப்படையில்தான் தமிழருக்குத் தீர்வு-சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்.
“சமஷ்டிக் கட்டமைப்பிலேயே அர்த்தமுள்ள எந்தத் தீர்வும் சாத்தியம் என்ற நிலைப்பாட்டில் வேறு சமரசம் அல்லது விட்டுக் கொடுப்புச் செய்து கொள்ளாமல் – அரசமைப்பில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் விரைவாக நடைமுறைப்படுத்தவும் – நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் – நாம் விவரித்துள்ளபடி, தமிழ் மக்களின் அபிலாஷைகளின் அடிப்படையிலும் மற்றும் தொடர்ந்து வந்த அரசுகளால் தீர்வுக்காக வழங்கப்பட்ட பல்வேறு உறுதிமொழிகளுக்கு இணங்கவும் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கையை விரைந்து முடிக்கவும் ஜனாதிபதியாகிய தங்களைக் கோருகின்றோம்.
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் இன்று (14) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
13 ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் நிலைப்பாட்டை அறியத் தருமாறு ஜனாதிபதி கோரியிருந்தார். அதற்கான காலக்கெடு நாளை (15) முடிவடைய இருக்கையில் சம்பந்தன் தமது ஐந்து பக்கக் கடிதத்தை இன்று அனுப்பி வைத்தார்.
அதில் -சுதந்திரம் பெற்ற காலம் முதல் – குறிப்பாக 1956 முதல் – தமிழர்கள் சமஷ்டி அடிப்படையான தீர்வே தங்கள் அபிலாஷை என்பதை எல்லாத் தேர்தல்களிலும் மாறாமல் வலியுறுத்தி வந்திருக்கின்றார்கள் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இடையில் அவர்கள் தனிநாட்டு கோரிக்கையையும் கூட வலியுறுத்தினர் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அர்த்தமுள்ள எந்தத் தீர்வும் சமஷ்டி அடிப்படையில் அமைய வேண்டும் என்பது இந்தக் கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
தமிழரின் தேசிய இனப் பிரச்சினை மற்றும் அவர்களின் நியாயமான அபிலாஷைகள் தொடர்பில் கடந்து வந்த ஒவ்வொரு அரசுகளும் அளித்த வாக்குறுதிகள் மற்றும் முயற்சிகள் இந்தக் கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
1983 முதல் இந்த விடயத்தில் இந்தியா வழங்கி வரும் பங்களிப்பும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் அடிப்படையில், தமிழ் மக்களின் அபிலாஷைகளின் உட்கிடைகளைப் புரிந்து கொண்டு, அவற்றுக்கு இணங்கவும், பல்வேறு அரசுகள் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் காலத்துக்கு காலம் வழங்கி வந்த உறுதிமொழிகளைக் கவனத்தில் எடுத்தும் தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கையை விரைந்து முடிக்குமாறு சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.