பூஜா பூமி எனும் பெயரில் காணி ஆக்கிரமிப்பு.
Keshihan Ilamuruganathan-திருகோணமலை
திருகோணமலை – தென்னைமரவாடி பகுதியில் உள்ள மக்களுடைய காணிகள் புல்மோட்டை அரிசிமலை பிக்குவினால் சட்டவிரோதமான முறையில் துப்பரவு செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் குழுத் தலைவர் ச.குகதசன் சனிக்கிழமை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது அனுமதி இல்லாத மக்களுடைய காணிகளும் துப்பரவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்னைமரவாடி பகுதியில் உள்ள 150 ஏக்கர் மற்றும் 100 ஏக்கருக்கு அதிகமான நிலப்பகுதியானது இவ்வாரத்தின் ஆரம்பத்தில் இருந்து எவ்வித அனுமதியும் இன்றி குச்சவெளி அரிசிமலை மதகுருவினால் துப்பரவு செய்யப்பட்டதாகவும் அதற்கு எதிராக குச்சவெளி பிரதேச செயலாளர், வனவள பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொதுமக்களினால் புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டை அடுத்து துப்பரவுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தென்னைமரவாடியில் உள்ள புத்த விகாரைக்காக 50 ஏக்கர் நிலம் வர்த்தமானியின் மூலம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் பூஜா பூமி எனும் பெயரில் மேலதிக காணிகளும் துப்பரவு செய்யப்பட்டு வருவதாகவும் இப்பகுதிக்குள் மக்களுடைய விவசாயக் காணிகளும் அடங்குவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.