அமைச்சரவையில் இடம்பிடித்தார் ஹரி ஆனந்தசங்கரி

 

பிரதமர் ட்ரூடோவின் திடீர் நியமனங்கள்.

கனடா ஸ்காபுரோத் தொகுதி (Scarborough—Rouge Park) நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி முதல் முறையாக நாட்டின் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார். பிரதமர் ஜஸ்டின் ரூடோ(Justin Trudeau) இன்று திடீரென அறிவித்த புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள புதிய முகங்களில் தமிழ்-கனெடியராகிய ஹரி என்கின்ற சத்தியசங்கரி ஆனந்தசங்கரியும் ஒருவராவார். அவருக்குக் கனடாவின் சுதேச உறவுகள் (Crown-Indigenous Relations) தொடர்புபட்ட அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை இந்தப் பொறுப்பை வகித்து வந்த மார்க் மில்லர் (Marc Miller) குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை தொடர்பான அமைச்சராகப் பதவி மாற்றப்பட்டிருக்கிறார்.

பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் லிபரல் கட்சி உறுப்பினரான ஹரி ஈழத்தமிழ் அரசியல் பின்புலத்தைக் கொண்டவர்.

மூத்த தமிழ் அரசியல் பிரமுகராகிய வி. ஆனந்தசங்கரியின் புதல்வர். பிரபல வழக்கறிஞராகிய அவர் 2015 இல் முதல் முறையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தார்.

படம் :புதிய அமைச்சர்கள் அணியுடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

கனடாவில் ஆளும் லிபரல் கட்சி பழமைவாதிகளிடம் செல்வாக்கிழந்து பின்தங்கி வருகின்றது என்றவாறு வெளியாகிவருகின்ற கணிப்புகளுக்கு மத்தியில் பிரதமர் ட்ரூடோ இன்றைய அதிரடியான அமைச்சரவை மாற்றத்தை அறிவித்துள்ளார். அவரது அரசில் இடம்பெற்றிருந்த மிக முக்கிய ஏழு அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

புதியவர்கள் சிலரிடம் முக்கிய அமைச்சுப் பொறுப்புகளைப் பிரதமர் ட்ரூடோ ஒப்படைத்துள்ளார். அவர்களில் ஒருவர் நீதி மற்றும் சட்டமா அதிபர் பொறுப்புக்கான அமைச்சராகிய ஆரிஃப் விரானி(Arif Virani). ஆரிஃப் விரானி ஆபிரிக்க நாடாகிய உகண்டாவில் சர்வாதிகாரி இடி அமீனின் ஆட்சியின் போது கொடுமைக்குள்ளாக்கப்பட்ட இந்திய சமூகத்தைச் சார்ந்தவர். அவரது குடும்பம் அங்கிருந்து 1972 இல் கனடாவுக்குத் தப்பி வந்தது.

இதுவரை பாதுகாப்பு அமைச்சராக இருந்த அனிட்டா ஆனந்த் (Anita Anand) திறைசேரியின் தலைவர் பொறுப்புக்கு மாற்றப்பட்டிருக்கிறார். புதிய பாதுகாப்பு அமைச்சராக பில் பிளேயர் (Bill Blair) நியமிக்கப்பட்டிருக்கிறார்.

“உக்ரைன் யுத்தம், வீட்டு வசதி நெருக்கடி, பணவீக்கம், காலநிலை மாற்றம், வெளிநாட்டுத் தலையீடு என்று கனடா எதிர்கொள்கின்ற பலவித நெருக்கடிகளுக்கு இந்த அமைச்சரவை மாற்றம் மிக அவசியமானது” – என்று பிரதமர் ட்ரூடோ புதிய அமைச்சர்களது பதவிப்பிரமாண நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">