34 வயதில் கல்வி அமைச்சரானார் கப்ரியேல் அட்டால்!அமைச்சரவையில் மாற்றங்கள்.

Kumarathasan Karthigesu-பாரிஸ்

எலிசபெத் போர்ன் பிரதமராக நீடிப்பு.

கடந்த சில நட்களாக எதிர்பார்க்கப்பட்டஅமைச்சரவை மாற்றங்கள் நேற்று இடம்பெற்றுள்ளன. அதிபர் மக்ரோன் நெருக்கடிகள் நிறைந்த தனது இரண்டாவது பதவிக் கால அரசியல் அதிகாரத்தை முன்னெடுப்பதற்காக அமைச்சரவையில் சிறு மாற்றங்களைச் செய்துள்ளார். எலிசபெத் போர்ன் பிரதமர் பதவியில் இருந்து தூக்கப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் இருந்த போதிலும் புதியவர் எவரும் அப்பதவியில் நியமிக்கப்படவில்லை.

 

அவரே பிரதமர் பதவியில் தொடர்கிறார் நிதி, உள்துறை, பாதுகாப்பு, நீதி வெளிவிவகாரம், தொழில் போன்ற முக்கிய துறைகளுக்கான அமைச்சுப் பதவிகளில் எந்த மாற்றங்களும் இல்லை.

அமைச்சுப் பொறுப்பு மாற்றங்களில் முக்கியமான ஒன்றாகப் பிரான்ஸின் முதலாவது கறுப்பினக் கல்வி அமைச்சரான பேஅபே என்டியேயிடம்  (Pap Ndiaye) இருந்துவந்த கல்வி அமைச்சுப் பொறுப்பு இளம் அரசியல்வாதியான கப்ரியேல் அட்டாலிடம் (Gabriel Attal) மாற்றி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மக்ரோனின் அணியில் வளர்ந்து வருகின்ற ஓர் இளம் அரசியல் நட்சத்திரமாகிய அட்டால், தனது 34 ஆவது வயதில் இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்கிறார். அவர் இதற்கு முன்னர் அரசாங்கப் பேச்சாளராகவும் பொது நிதி முகாமைத்துவம் தொடர்பான அமைச்சராகவும் பதவிகளை வகித்திருந்தார்.

மிகச் சிறந்த கறுப்பினக் கல்வியாளராகிய பேஅபே என்டியே  அரசியல் அனுபவமின்மை காரணமாக அரசாங்க அணியினரிடையே பெரிதும் செல்வாக்கிழந்த அமைச்சராகக் கணிக்கப்பட்டுவந்தார். பாடசாலைத் துன்புறுத்தல்கள் உட்படக் கல்வித் துறை சம்பந்தப்பட்ட பல்வேறு விவகாரங்களில் அவரது நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவந்தன.

புதிய சுகாதார அமைச்சராகப் பிரதமர் எலிசபெத் போர்னின் அலுவலகத் தலைமை அதிகாரியாக விளங்கிய  ஒரேலியன் ரூசோ (Aurelien Rousseau) என்ற புதுமுகம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பிரதி உள்நாட்டு அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த செல்வாக்கு மிக்க இளம் பெண் அரசியல்வாதி மர்லின் ஷியாப்பா(Marlène Schiappa) அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். புதிய அமைச்சரவையில் அவரது பெயர் இடம்பெறவில்லை. மக்ரோன் அணியில் நம்பிக்கை மிக்க ஒருவராகக் கருதப்பட்டவர் ஷியாப்பா. ஆனால் அண்மைக்காலத்தில் அவரால் தொடங்கப்பட்ட “மர்லின் நிதியம்” என்ற அமைப்பில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதை செனற் விசாரணைக்குழு கண்டறிந்திருந்தது. அதேசமயம் தீவிர பெண்ணியல்வாதியாகிய அவர்  “பிளேபோய்” சஞ்சிகையின் (Playboy magazine) அட்டைப் படத்தில் கவர்ச்சிகரமாகத் தோன்றிப் பெரும் சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

நாட்டில் ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்த வேளை முக்கிய பெண் அமைச்சர் அவ்வாறு ஆபாசமாகத் தோன்றிக் காட்சி கொடுத்தமை பிரதமர் எலிசபெத் போர்னுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">