சில வரம்பு மீறிய செயல்களைத் தடுக்க பொதுவான டிஜிட்டல் சட்ட ஒழுங்கு தேவை.
இளயோரது கலவரங்கள் குறித்து மக்ரோன் கருத்து“ஒழுங்கு இல்லாமல் சுதந்திரம் இல்லை..”
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட கலவரங்களில் இருந்து நான் கற்றுக் கொண்ட ஒரே பாடம் ஒழுங்கு… ஒழுங்கு…ஒழுங்கு. ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்.
ஒழுங்கு இன்றிச் சுதந்திரம் இருக்க முடியாது. குடும்பத்தில் தொடங்கிச் சகல மட்டங்களிலும் நமது நாடு அதிகாரத்தை நிலைநிறுத்துவது அவசிய தேவையாக உள்ளது.
-அதிபர் எமானுவல் மக்ரோன் இன்று வழங்கிய தொலைக்காட்சிச் செவ்வி ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். தென் பசுபிக்கில் அமைந்துள்ள பிரான்ஸின் கடல்கடந்த நிர்வாகத் தீவுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், நியூகலிடோனியாவின் (Nouvelle-Calédonie) தலைநகர் நௌமியாவில் (Nouméa) தங்கியிருந்தவாறு தொலைக்காட்சி வழியாக விசேட செவ்வி வழங்கினார்.TF1 மற்றும் France -2 தொலைக்காட்சிகளில் அவரது செவ்வி ஒளிபரப்பாகியது.
கடந்த மாதம் நாஹெல் என்ற பதின்ம வயதுக் கார்ச் சாரதி பாரிஸின் புற நகரில் வைத்துப் போக்குவரத்துப் பொலீஸாரால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை அடுத்து நாடெங்கும் இளவயதினர் வீதிகளில் திரண்டு வன்முறைகளில் ஈடுபட்டனர். எதிர்ப்பு நடவடிக்கைகள், கலவரம், சூறையாடல் கள் காரணமாக நாடு பெரும் குழப்ப நிலையைச் சந்தித்தது. இன்றைய தொலைக்காட்சி உரையில் அந்த இளைஞர் வன்செயல்கள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு மக்ரோன் பதிலளித்தார்.
பாடசாலைகள், நகர மண்டபங்கள், விளையாட்டுப்பயிற்சி நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டமையைச் சுட்டிக் காட்டிய மக்ரோன், வரம்பு மீறிய செயல்களைக் கட்டுப்படுத்த “டிஜிட்டல் பொதுச் சட்ட ஒழுங்கு (“public digital order”) அவசியம் என்பதை முன்மொழிந்தார். இளையோர் பலர் வீதிகளில் ஒன்று திரள்வதற்கும் கலவரங்களைத் திட்டமிடுவதற்கும் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தினர் என்பதை அவர் குறிப்பிட்டுக் கூறினார் .
எதிர்ப்பு மற்றும் அமைதியின்மையைத் தூண்டுகின்ற இளைஞர்களுக்கு மாற்று வழிகளைக் காட்டுவதற்கு நாங்கள் அதிக முதலீடுகளைச் செய்ய வேண்டும். ஒரு திட்டமிட்ட கட்டமைப்பின் ஊடாக அவர்களது முன்னேற்றத்துக்குப் பெருமளவு முதலீடுகள் செய்யப்படவேண்டும் – என்றும் வலியுறுத்தினார்.
கடந்த மாதம் நாடெங்கும் இளையோரது வன்செயல்கள் தலைவிரித்திருந்த சமயத்தில் கருத்து வெளியிட்ட அரசுத் தலைவர், கலவரங்களைத் தூண்டுவதற்கு உடந்தையாக இருந்த சமூக ஊடக இணையத் தளங்களைத் “தேவை ஏற்பட்டால் அரசு துண்டிக்கும்” – என்று கூறியிருந்தார். அரசியல் மட்டங்களில் அப்போது அதற்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பி இருந்தது.
கலவரங்களில் ஈடுபட்டவர்களில் சுமார் ஆயிரத்து முந்நூறு பேர்வரை நீதி விசாரணைகளை எதிர்நோக்க நேர்ந்துள்ளது .அவர்களில் கிட்டத்தட்ட அரைவாசிப் பங்கினர் 18 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.
ஜூலை 14 சுதந்திர நாளை ஒட்டி அரசுத் தலைவர் ஆற்றுகின்ற வழக்கமான தொலைக்காட்சி உரை இந்த முறை இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாகவே அவர் இன்றைய விசேட தொலைக்காட்சிச் செவ்வியை பாரிஸில் இருந்து 16 ஆயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் நௌமியாவில் தங்கியிருந்தவாறு நாட்டு மக்களுக்கு வழங்கினார் என்று எலிஸே வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் எலிசபெத் போர்ன் தனது அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து முதலாவது கூட்டத்தை இன்று திங்கட்கிழமை நடத்தினார்.
அதன் பின்னர் புதிய அமேச்சர்கள் அணியினருடன் அவர் எடுத்துக் கொண்ட படம் இது.
நியூ கலிடோனியா சென்றுள்ள அவர் அங்கிருந்து வனுவாட்டு (Vanuatu) மற்றும் பப்புவா நியூ கினியா(Papua New Guinea) தீவுகளுக்கும் செல்வார்.
சீனா – அமெரிக்கா இடையே பெரும் பதற்றம் நிலவுகின்ற தென் பசுபிக்கில் அமைந்துள்ள பிரெஞ்சுத் தீவுகளுக்கு மக்ரோன் விஜயம் செய்வது குறிப்பிடத் தக்கது.