“மலையகம் 200” தொனிப்பொருளில் திருக்கோணமலையில் கலந்துரையாடல் .

Keshihan Ilamuruganathan-திருகோணமலை

மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு பல்வேறுபட்ட நெருக்கடிகலுக்கு மத்தியில், சொல்ல முடியாதளவான துயரங்களை எதிர்கொண்டு இந்த நாட்டிற்கு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு, இருநூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இவ்வருடம் முழுவதும் இலங்கையின் பல்வேறு இடங்களில் “மலையகம் 200” என்ற தொனிப்பொருளில் மலையக மக்களின் திரட்சி, அவர்களின் உரிமைப் போராட்டம் என பல விடயங்கள் தொடர்பான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழர்களின் தலைநகரான திருக்கோணமலையில் முதல் முதலாக “மலையகம் 200” தொனிப்பொருளில் திருக்கோணமலையை சேர்ந்த சமூக மட்ட இளையோர் அமைப்பான “தளம்” அமைப்பினால் 21 & 22ம் தினங்களில் கலந்துரையாடலும், கருத்தாடல்களும் இடம்பெற்றன.

21.07.2023 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை திருக்கோணமலையைச் சேர்ந்த இளையோருடன், “இளையோருடனான கலந்துரையாடல்” என்ற தலைப்பில் மலையக மக்களின் சமூக கட்டமைப்பு மற்றும் அவர்களின் வாழ்வியல், எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், கலந்துரையாடலில் பல இளையோர் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்து, கலந்துரையாடினர்.

மேலும் 22.07.2023 சனிக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை திருகோணமலை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்களுடன் “மூத்தோருடனான கருத்தாடல்” என்ற பெயரில் கருத்தாடல் இடம்பெற்றது. இதில் மலையக மக்கள் தனி தேசிய இனமாக அடையாளப்படுத்தப்பட வேண்டுமா? என்ற கேள்வியுடன் மலையக மக்களுக்கும், வடக்கு கிழக்கு தமிழர்களுக்கும் இடையிலான தொடர்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதில் திருக்கோணமலையை சேர்ந்த பல சமூக செயற்பாட்டாளர்களும், நலன் விரும்பிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

மாலை 3 மணி முதல் 6 மணி வரை மலையக மக்களுக்கும், வடக்கு கிழக்கு தமிழர்களுக்குமான தொடர்பை உறுதி செய்யும் வகையில் எடுக்கப்பட்ட ஆவணத் திரைப்படம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டதுடன், அது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் இளையோர், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இரண்டு சந்திப்புகளும் கலந்துரையாடப்பட்ட விடயங்களை ஆவண திரைப்பட மூலம் மேலும் தெளிவுபடுத்திக் கொண்டனர்.

இந்த கலந்துரையாடல், கருத்தாடல்களில் மலையக செயற்பாட்டாளர் திரு. பொன் பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், மலையக மக்களின் உரிமைகளை சார் செயற்பாடுகளில் ஈடுபடும் திருக்கோணமலை சேர்ந்த செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.