சீனிக்குப் பதிலான இனிப்புச் சுவையூட்டி புற்றுநோயை உண்டாக்கலாம்!

உலக சுகாதார நிறுவனம்

Kumarathasan Karthigesu-பாரிஸ்

மென்பானங்கள் மற்றும் உணவு வகைகளில் சேர்க்கப்படுகின்ற இனிப்புச் சுவையூட்டிகள்(Aspartame) மனிதர்களில் புற்றுநோயைக் – குறிப்பாக கல்லீரல் புற்றுநோயை-உண்டாக்கலாம்.

உலக சுகாதார நிறுவனத்துடன் சேர்ந்து இயங்குகின்ற சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகவரகம் (International Agency for Research on Cancer – IARC) இவ்வாறு எச்சரிக்கை செய்துள்ளது.

உலகில் சீனிச் சுவைக்குப் பிரதியீடாகப் பரந்த அளவில் உபயோகிக்கப்பட்டு வருகின்ற இனிப்புச் சுவையூட்டிக்கும் புற்று நோய்க்கும் உள்ள தொடர்பு பற்றி  உலக அமைப்பு வெளியிடுகின்ற முதல் பகிரங்க மதிப்பாய்வு இதுவாகும்.

உலகெங்கும் மேற்கொள்ளப்பட்ட ஆயிரத்து 300 ஆய்வுகளது அறிக்கைகளின் அடிப்படையிலேயே செயற்கை இனிப்புச் சுவையூட்டி “மனிதர்களில் புற்றுநோயை உண்டாக்கலாம்” என்ற முடிவை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இனிப்புச் சுவையூட்டிகள் புற்றுநோயை உருவாக்கலாம் என்ற முடிவு நீண்டகாலத்துக்கு முன்னரே பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்த போதிலும் அதனை உறுதிப்படுத்தி அறிவிப்பதை உலக சுகாதார நிறுவனம் தாமதப்படுத்தி வந்தது. இனிப்புச் சுவையூட்டியை(Aspartame) சரியான அளவில் உள்ளெடுப்பது ஆபத்தை ஏற்படுத்தாது என்று அமெரிக்கா உட்பட மற்றும் சில நாடுகளது உணவு மருந்துக் கட்டுப்பாட்டு அதிகார அமைப்புகள் வாதாடி வந்தமையே அதற்குக் காரணமாகும் .

உலகப் புகழ்பெற்ற “கோலா” மென்பானம் உட்பட ஏராளமான பானங்கள், உணவுகள், பற்பசை போன்றவற்றில் இனிப்புச்சுவைக்குப் பதிலாக இந்த “Aspartame” எனப்படும் செயற்கைச் சுவையூட்டி கலக்கப்படுகின்றது. கடந்த பல தசாப்தங்களாக நீரிழிவு, உடற்பருமன் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பலரும் செயற்கை இனிப்புச் சுவையூட்டிய மென் பானங்களையும் உணவுவகைகளையும் மிகப் பரந்துபட்ட அளவில் உள்ளெடுத்து வருகின்றனர்.

1964 இல் அறிவியலாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட வெண் நிறத் தூள் போன்ற இந்தச் செயற்கை இனிப்பு சாதாரண சீனி மற்றும் சர்க்கரையை விடவும் இருநூறு மடங்கு இனிப்புச் சுவை கொண்டது. அமெரிக்கா 1974 இல் அதனை உணவுப் பொருள்களில் பாவிப்பதற்கு அனுமதித்தது. அதே செயற்கை இனிப்பை நுகர்வுக்கு அனுமதிப்பதற்கு பிரான்ஸ் 1994 வரை காத்திருந்தது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">