பிரான்ஸிடமிருந்து மேலும் விமானங்கள், நீர்மூழ்கிகளை வாங்க இந்தியா உடன்பாடு.

 

சுதந்திர தினத்தில் பங்கேற்க பிரதமர் மோடி பாரிஸ் வருகை.

வாணவெடி வன்செயலை  எதிர்பார்த்து நாடெங்கும் பொலீஸார் உஷார் நிலை.

பிரான்ஸிடம் இருந்து மேலும் 26 கடற்படை ராஃபேல்(marine Rafale) போர் விமானங்களையும் மூன்று ஸ்கோர்பன் (La classe Scorpène) நீர்மூழ்கிகளையும் வாங்குவதற்கான பூர்வாங்க இணக்கப்பாட்டை இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியிட்டிருக்கின்றனர்.

பிரான்ஸின் ஜூலை 14 தேசிய நாள் நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வியாழக்கிழமை நண்பகல் பாரிஸ் வந்தடைந்த கையோடு புதிய ராஃபேல் விமானக் கொள்வனவு தொடர்பான அறிவிப்பு புதுடில்லியில் வெளியாகி இருக்கிறது.

பிரான்ஸின் தயாரிப்புகளான போர் விமானங்களையும் கப்பல்களையும் வாங்குகின்ற முன்னணி நாடாக இந்தியா உள்ளது. பிரதமர் மோடி 2015இல் பாரிஸ் வருகை தந்தபோது

ராஃபேல் போர் விமானங்களை வாங்குகின்ற மிகப் பெரிய கொள்வனவு உடன்பாடு ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.

இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய பங்குதாரர் உறவு ஏற்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதை முன்னிட்டு பிரான்ஸின் சுதந்திர தின விழாவுக்கு முதன்மை விருந்தினராகப் பிரதமர் நரேந்திர மோடியை அதிபர் மக்ரோன் அழைத்திருக்கிறார். நேற்றுப் பகல் பாரிஸ் ஓர்லி விமான நிலையத்தை வந்தடைந்த அவரை பிரான்ஸின் பிரதமர் எலிசபெத் போர்ன் செனற் சபையின் தலைவர் ஜெராட் லார்சே (Gérard Larcher) ஆகியோர் அங்கு வரவேற்றனர்.

இதேவேளை, நரேந்திர மோடியை மனித உரிமைகளின் எதிரி என்று வர்ணித்து அவரது பாரிஸ் வருகைக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்துத் தேசியவாதியாக இந்தியாவை சர்வாதிகார ஆட்சி அதிகாரத்துக்கு இட்டுச் செல்கின்ற ஒரு தலைவரை, – உள்நாட்டில் சிறுபான்மை மத மக்களின் உரிமைகளை நசுக்கி வருகின்ற ஒருவரை – சுதந்திர நாளுக்கு அழைத்து செங்கம்பள வரவேற்பளிப்பதா? என்று மனித உரிமை இயக்கங்கள் கேள்வி எழுப்பி உள்ளன. மோடியின் வருகைக்கு எதிராகப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் டசின் கணக்கில் கலந்துகொண்ட எதிர்ப்பு நிகழ்வு ஒன்றும் பாரிஸில் இடம்பெற்றுள்ளது.

இன்றைய சுதந்திர நாளில் மீண்டும் நகர்ப்புற வன்செயல்கள் வெடிக்கலாம் என்று எதிரபார்க்கப்படுகிறது. இதனால் நாடெங்கும் விரிவான பொலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சில நகரங்களில் நேற்றைய தினமே பஸ் மற்றும் ட்ராம் போக்குவரத்துகள் இரவு பத்து மணியோடு நிறுத்தப்பட்டன. ஒரு லட்சத்து 40 ஆயிரம் பொலீஸார் மற்றும் ஜொந்தாம் படையினர் காவல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

பொலீஸாருக்கு எதிராக வாணவெடி மோட்டார் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் வாணவெடி விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. பல நகரங்களில் சுதந்திர தின வாண வேடிக்கை நிகழவுகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">