பிரதமர் மோடிக்கு சதுரங்கத் தாயக் கட்டைகளைப் பரிசளித்தார் மக்ரோன்!
Kumarathasan Karthigesu-பாரிஸ்
எலிஸேயில் சைவபோசன விருந்தில் விருது வழங்கல்.
செங்கம்பள வரவேற்புக்கு மனித உரிமைக்குழு கவலை.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு தீவிர சதுரங்க விளையாட்டுப் பிரியர். இந்தியாவில் சதுரங்க விளையாட்டை மேலும் ஊக்குவிப்பதற்காகப் பல முயற்சிகளை எடுத்து வருபவர். பாரிஸில் சுதந்திர தின விழாவுக்கு வருகை தந்திருந்த அவருக்கு அதிபர் மக்ரோன் சதுரங்க விளையாட்டுக் காய்களைப் பரிசளித்திருக்கிறார்.
பிரான்ஸில் அருங்காட்சிப் பொருளாகப் பேணப்படுகின்ற 11 ஆம் நூற்றாண்டு காலப் பகுதிக்குரிய சதுரங்க விளையாட்டுக் கட்டைகள் அடங்கிய தொகுதியையே (Chessboard) மக்ரோன் நினைவுப் பரிசாகத் தனது இந்தியப் பங்காளிக்கு வழங்கியுள்ளார். பாரிஸ் பஸிலிக் து சென்-துனி பொக்கிஷக் களஞ்சியத்தில் (le trésor de la basilique de Saint-Denis) பேணப்பட்டுவருகின்ற யானைத் தந்தத்தினாலான சதுரங்கத் தாயக் கட்டைகளது முப்பரிமாண அச்சு வடிவில்(3D-three-dimensional printing) தயாரிக்கப்பட்ட மாதிரித் தாயக் கட்டைகளே மோடிக்குப் பரிசளிக்கப்பட்டன என்ற தகவலை பாரிஸ் செய்தி ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.
முதலாம் உலகப் போரின் போது பிரான்ஸில் சண்டையில் ஈடுபட்ட சீக்கியப் படைப் பிரிவின் வீரர்கள் பாரிஸ் நகரில் வீதியில் அணிவகுத்துச் செல்கையில் பெண் ஒருவர் அவர்களுக்குப் பூங்கொத்தைப் பரிசளிக்கின்ற பழைய புகைப்படத்தின் பிறேம் செய்யப்பட்ட பிரதி ஒன்றையும் மக்ரோன் இந்தியப் பிரதமரிடம் கையளித்துள்ளார். ஜூலை 14, 1916 அன்று சுதந்திர தின விழாவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற இந்தப் புகைப்படத்தின் மூலப் பிரதி பிரான்ஸின் தேசிய நூலகத்தில் பேணப்பட்டு வருகின்றது.
அதிபர் மக்ரோன் எலிஸே மாளிகையில் இன்று பகல் பிரதமர் மோடிக்குச் சைவபோசன விருந்தளித்தார். அதன் போது பிரான்ஸின் மதிப்பு மிகுந்த உயர் விருதுகளில் ஒன்றாகிய “லெஜியோந் தொணர்” சின்னத்தை (insignia of Grand ‘Croix de Légion d’Honneur) அவருக்கு வழங்கிக் கௌரவித்தார்.
பின்னர் சாம்ஸ் எலிஸே (Champs-Elysées) பகுதியில் நடந்த சுதந்திர தின இராணுவ அணிவகுப்பை அதிபர் மக்ரோனுடன் சேர்ந்து மோடி பார்வையிட்டார்.
இந்தியாவின் சிறுபான்மை மதங்களது உரிமைகளை மீறி வருகின்றார் என்று தெரிவித்துப் பிரதமர் மோடிக்குப் பாரிஸில் அளிக்கப்பட்ட தடல்புடலான செங்கம்பள வரவேற்புக் குறித்து மனித உரிமைகள் காப்பகம் (Human Rights Watch) தனது கவலையைப் பகிர்ந்துள்ளது.
“இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. அதனை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் யதார்த்த நிலைமை அங்கு வேறு விதமாக உள்ளது. பல உரிமைகளும் சுதந்திரங்களும் அங்கு மறுக்கப்படுகின்றன” – என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்கு ஆசியப் பிரிவுக்குப் பொறுப்பான மீனாட்சி கங்குலி (Meenakshi Ganguly) தெரிவித்திருக்கிறார்.
மதிப்புமிக்க அடிப்படைகளாகிய சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் கொண்டாடுகின்ற ஒரு நாளில் அதே மதிப்புகளைத் தனது நாட்டில் அடக்கி ஒடுக்குகின்ற தலைவர் ஒருவரைப் பிரான்ஸ் அழைத்துக் கௌரவிப்பது கவலையளிக்கிறது – என்றும் மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.
நரேந்திர மோடிக்கு நாட்டின் உயர்ந்த விருது வழங்கப்பட்டிருப்பது பிரான்ஸின் அரசியல் மட்டங்களிலும் விவாதங்களைக் கிளப்பி உள்ளது. நரேந்திர மோடியின் கீழான இந்துத் தேசியவாத அரசு நாட்டைச் சர்வாதிகாரப் பாதையில் இட்டுச் செல்வதாகவும் சிறுபான்மை முஸ்லிம்களைக் கொடுமைப் படுத்துவதாகவும் பாரிஸ் மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் – மனித உரிமை இயக்கங்களும், அவதானிகளும் மோடியின் தலைமை மீது அடுக்கடுக்காகப் பல்வேறு குற்றக்கணைகளைத் தொடுத்து வருகின்ற போதிலும் அமெரிக்காவும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவோடு மூலோபாய நெருக்கத்தை வலுப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருவதை சமீப கால நடவடிக்கைகளில் அவதானிக்க முடிகிறது.