பழைய ஆடைகளை வீசாமல் தைத்துப் பாவிப்போருக்கு ஊக்குவிப்பு போனஸ்!
Kumarathasan Karthigesu-பாரிஸ்
“அதிவேக பஷன்” மாற்றம் பாவித்த உடுப்புக் கழிவுகள் மலைபோலக் குவிகின்றன.
புதியவற்றை வாங்காமல் பாவித்த உடுப்புகள், மற்றும் சப்பாத்துகளை இயன்றவரை மீளத் தைத்துச் சீரமைத்து அணிகின்ற பழக்கத்தைக் கொண்டுவருவதற்காக அரசு விசேட “போனஸ்” ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது.
நாடு முழுவதும் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் அறிமுகப்படுத்தவுள்ள இந்தத் திட்டம் தொடர்பான விவரங்களை சுற்றுச் சூழல் அமைச்சர் பெரோஞ்சே குய்யாட் (Bérangère Couillard) வெளியிட்டிருக்கிறார். 2023-2028 காலப் பகுதிக்கு இடையில் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக 153 மில்லியன் ஈரோக்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜவுளித் துறையினருக்கான இந்த போனஸ் திட்டத்துக்குப் பழுதுபார்ப்பதற்கான போனஸ்(“repair bonus”) என்று பெயரிடப்பட்டுள்ளது. தையல் பட்டறைகள்நடத்துவோர் , சப்பாத்து தைப்பவர்கள் போன்ற தொழில் துறையினரை இந்தத் திட்டத்தில் இணையுமாறு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். ஒரு சட்டையின் விளிம்பை மடித்துத் தைப்பதற்கு அல்லது ஒரு சப்பாத்துக்கு அடிக் குதி பொருத்துவதற்கு 7 ஈரோ முதல் 25 ஈரோ வரை போனஸ் வழங்கப்படும். ஆடைகளை மீளப் பயன்படுத்துவதற்காக அவற்றைத் தைக்க விரும்புவோருக்கு அதற்கான செலவில் இந்த போனஸ் தொகையை அரசு செலுத்தும்.
ஆடைகளை மீளச் சீர்செய்து அணிய விரும்புவோர் அதற்கான தையல் செலவுகள் காரணமாக அதைத் தவிர்த்து விட்டுப் புதியவற்றைக் கொள்வனவு செய்கின்றனர். எனவே தையல் செலவைப் பொறுபேற்பதன் மூலமாக ஆடைகளது மீள் பயன்பாட்டை ஊக்குவிக்க முடியும் என்று பிரான்ஸின் சுற்றுச் சூழல் அமைச்சு நம்புகிறது.
பூமியை மிக மோசமாகப் பாதிக்கின்ற மனித நடவடிக்கைகளில் ஆடைத் தயாரிப்புத் தொழில்துறையே முதலிடத்தில் இருந்து வருகிறது.
மனிதன் மணிக்கொரு தடவை மாறுகின்ற புதிய பஷன் ஆடைகளை வாங்கி மாற்றி மாற்றி அணிவதால் கைவிடப்படும் உடுப்புக் கழிவுகள் மலைபோலக் குவிந்து வருகின்றன. கழிவு அகற்றலில் இது ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.
பிரான்ஸில் ஆண்டு தோறும் ஏழு லட்சம் தொன் ஆடைக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. பழைய ஆடைகள், சப்பாத்துகளைச் சேகரிப்பதற்காக விசேட கழிவுக் கொள்கலன்கள் நகரங்கள் தோறும் நிறுவப்பட்டு வருகின்றன.
நவநாகரீக வடிவங்கள் மிக வேகமாக மாறிக்கொண்டிருப்பதால் வாங்கிய ஆடையை ஓரிரு தடவை அணிந்து வீசி விட்டு அடுத்த இன்னொரு புதிய டிசைன் ஆடையைத் தேடுவது வாடிக்கையாகிவருகிறது. வேகமாக மாறுகின்ற நாகரீக ஆடை வடிவங்களும் (Fast fashion) மனிதர்களது ஆடைத் துணிமணி நுகர்வு வெறியும் பூமியையும் சுற்றுச் சூழலையும் மிக மோசமாகப் பாதித்து வருகின்றன.
அதேசமயம் பழைய ஆடைகளை விற்பனை செய்யும் கடைகள் பரவலாக நகரங்கள் எங்கும் திறக்கப்பட்டு வருகின்றன. சூழலுக்குப் பாதிப்பில்லாத விதமாக வாழ விரும்புவோர் பாவித்த ஆடைகளை அதற்கான கடைகளில் வாங்கி அணிவதில் ஆர்வங்காட்டிவருகின்றனர்.