சவேந்திர சில்வாவை தடைசெய்யும் கோரிக்கைக்கு பிரித்தானிய பாதுகாப்புத்துறை நிழல் பேச்சாளர் ஆதரவு!
- மதிப்பிற்குரிய டேவ் டூகன் எம்பி (Rt.Hon. Dave Doogan MP)யுடன் இராஐதந்திர சந்திப்பு -
இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடைசெய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரித்தானியாவின் அங்கஸ் (Angus) பாராளுமன்ற உறுப்பினரும், பிரித்தானியாவின் பாதுகாப்புத்துறை நிழல் பேச்சாளர் (Shadow SNP Spokeperson for Defence) மதிப்பிற்குரிய டூகன் எம்பி (Rt.Hon. Dave Doogan MP) அவர்களுடன் இராஜதந்திர சந்திப்பு ஒன்று இன்று திங்கட்கிழமை (10/06/2023) பிற்பகல் 4.00 மணியளவில் மெய்நிகர் வழியாக இடம்பெற்றுள்ளது.
சட்ட ஆலோசகரும் மனித உரிமைசெயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில் ICPPG அமைப்பின் சார்பில் பெலீசியஸ் பிரான்சிஸ் மற்றும் சுபதர்ஷா வரதராசா ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் இனப்படுகொலையின் நேரடி சாட்சியங்கள் மற்றும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களான சஞ்சீவன் சிறிதரன் , நிலக்ஐன் சிவலிங்கம் மற்றும் ரகிஷன் சிவலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கீத் குலசேகரம் அவர்கள் உரையின் போது, இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலைக்கு வரலாற்று ரீதியாக பிரித்தானியாவே பொறுப்பு என்பதை விளக்கி, தமிழ்மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய கடமைப்பாட்டையும் எடுத்துரைத்தார். ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு(FCDO) போதுமான ஆதாரங்களை சமர்பித்த போதும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார். அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள்கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடிசாட்சி என்றும்தெரிவித்தார்.
சவேந்திர சில்வா யுத்தகுற்றங்களில் ஈடுபட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்படப்பட்டிருப்பதையும், அவர்மீது ஏற்கனவே அமெரிக்கா, கனடா பயணத்தடை விதித்துள்ளதையும் எடுத்துக்காட்டிய அவர், அமெரிக்கா, கனடாவின் வழியை பின்பற்றி பிரித்தானியாவும் தடை விதிக்கவேண்டும் என்று கோரி பிரித்தானிய புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதையும் விவரித்தார்.
அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதுடன் FCDO விற்கு தங்கள் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்யக் கோரி அழுத்தம் கொடுப்பதாகவும், பிரித்தானிய தமிழர்களிற்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்குழுவில் (APPGT) இணைவதாகவும் வாக்களித்தார்.