விமானத்திலிருந்து வீசப்பட்ட போதை மருந்துப் பொதிகள்!

Kumarathasan Karthigesu-பாரிஸ்

பிரான்ஸின் தென்கிழக்கு மலைப்பகுதியில் பரபரப்பு

சந்தேகத்துக்கிடமான விதத்தில் பறந்த உல்லாச விமானம் ஒன்றைப் போர் விமானம் குறுக்கிட்டு வழிமறித்த போது அதிலிருந்து பல பொதிகள் தரைக்கு வீசப்பட்டன. அவை போதை மருந்துப் பவுடர் பொதிகள் என்பது பின்னர் தெரிய வந்துள்ளது.

 

பிரான்ஸின் தென்கிழக்கு மலைப்பிரதேசத்தில் ஆர்டேச் (Ardèche) என்ற மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. ஜேர்மனியின் பக்கமாக இருந்து வந்த  அந்தச் சிறிய – ஒற்றை இருக்கை கொண்ட – உல்லாச விமானத்தின் பயணப்பாதை தெளிவற்றுத் தெரிந்ததால் அதன் மீது சந்தேகம் ஏற்படவே விமானப் படையின் ராஃபேல் (Rafale) போர் விமானம் ஒன்று அதனைப் பின் தொடர்ந்தது.

படம் :பிரான்ஸின் ராஃபேல் போர் விமானம்.

விமானத்தின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. குறிப்பாக அது ஃபெசன்ஹெய்மில் (Fessenheim-Haut-Rhin)அமைந்துள்ள அணு மின் உலை மீது பறந்தது. வானொலித் தொடர்பில் அதன் விமானி தெளிவான பதில்களை வழங்கவில்லை. அதனால் போர் விமானம் அதனைக் குறுக்கிட்டு வழிமறித்தது. அச்சமயத்தில் உல்லாச விமானத்தின் கதவு திறக்கப்படுவதையும் அதிலிருந்து பல பொதிகள் கீழே வீசப்படுவதையும் போர் விமானம் அவதானித்து என்று

விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆர்டேச் (Ardèche) மாவட்டத்தின் சில கிராமங்களில் வீழ்ந்த அந்தப் பொதிகள் உள்ளூர் வாசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தின. பொதிகளில் வெண்ணிறப் பவுடர் போன்ற பொருள் இருந்ததைச் சிலர் கண்டுள்ளனர். அவை பின்னர் மீட்டெடுக்கப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டபோது அது மெதாம்பெற்றமின் (méthamphétamine) போதைப் பொருள் என்பது தெரிய வந்தது.

ஒவ்வொன்றும் சுமார் முப்பது கிலோ எடையுடைய 15 பொதிகள் இவ்வாறு விமானத்தில் இருந்து வீசப்பட்டுள்ளன.

விமானி போலந்து நாட்டைச் சேர்ந்தவர். போர் விமானம் வழி மறித்ததால் அச்சமடைந்த அவர் அங்குள்ள சிறிய ஓடுபாதை ஒன்றில் விமானத்தை இறக்கி விட்டுத் தப்பி ஒட முயன்றுள்ளார். கொமாண்டோ பொலீஸார் அவரைத் துரத்திப் பிடித்துக் கைதுசெய்தனர். விமானத்தில் இருந்து 45 ஆயிரம் ஈரோக்கள் பணத்தையும் கைப்பற்றினர். உள்ளூர் நீதிமன்றம் ஒன்று உடனடியாகவே அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறையும் பிரான்ஸின் எல்லைக்குள் வருவதற்கு ஆயுள் முழுவதும் தடையும் விதித்தது.

போதைமருந்துக் கடத்தல் குழுக்களின் புகலிடமாக போலந்து நாடு மாறியுள்ளது. பல்வேறு குற்றச் செயல்களைப் புரிவோர் அங்கு மறைந்து வாழ்கின்றனர். போலந்தில் இருந்து போதைப் பொருள் கடத்தி வந்த பலர் இதற்கு முன்னரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எனினும் கடத்தலுக்கு உல்லாச விமானமும் பயன்படுத்தப்படுவது இப்போதுதான் தெரிய வந்துள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">