கலவரத்தில் கைதான இளம் பிள்ளைகளின் பெற்றோர்கள் விசாரணைக்கு அழைக்கப்படலாம்.
Kumarathasan Karthigesu-பாரிஸ்
“குழந்தைகளை வளர்ப்பது அரசின் பொறுப்பு அல்ல..”
நாடு முழுவதும் முந்திய இரவுகளுடன் ஒப்பிடுகையில் நேற்று சனிக்கிழமை இரவு வன்செயல்கள் ஓரளவு தணிந்து காணப்பட்டதாக உள் துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரவு பாரிஸ் உட்பட முக்கிய நகரங்களில் வன்முறைகளில் ஈடுபட்ட 719 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 577 வாகனங்களும் 74 கட்டடங்களும் எரிக்கப்பட்டுள்ளன. 54 பொலீஸ் மற்றும் ஜொந்தாம் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கலவரங்களில் ஈடுபட்டுக் கைதாகித் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களது சராசரி வயது 17 என்று நீதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார். மிக மோசமான தீ வைப்பு, சூறை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை – அவர்கள் சிறுவர்களாக இருப்பினும் – கடுமையான தண்டனைகளை வழங்கவேண்டும் என்பதற்கு ஆதரவான கருத்து நாட்டு மக்கள் மத்தியில் காணப்படுவதாக வலதுசாரி சார்பு செய்தி ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டிருக்கின்றன.
நாஹெல் என்ற 17 வயது இளைஞனின் மரணத்தைத் தொடர்ந்து நகரங்களில் பரவிய கலவரங்களில் வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பல நூற்றுக் கணக்கான சிறுவர்கள் கைதாகித் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பாரிஸின் புறநகரங்களில் கைதானோரில் ஒருசில தமிழ் இளையோரும் அடங்கியுள்ளனர் எனத் தெரியவருகிறது.
“பிள்ளைகளைப் பெற்றோரது பொறுப்பில் விட்டுவிடப் போகின்றோம். அவர்கள் தமக்கிருக்கின்ற கடமையை உணரட்டும் “-என்று நீதி அமைச்சர் எரிக் டுப்பொண்ட் மொரேட்டி (Eric Dupond-Moretti) பாரிஸில் உள்ள நீதிமன்றம் ஒன்றுக்கு வருகை தந்தசமயம் தெரிவித்திருக்கிறார்.
“தங்கள் குழந்தைகளின் மீது ஆர்வம் காட்டாத பெற்றோர்கள், மற்றும் அவர்கள் எங்கு செல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டும் அவர்களை இரவில் வீதிகளில் சுற்றித் திரிய அனுமதித்த பெற்றோர்களுக்கு இரண்டு ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும் 30,000 ஈரோக்கள் அபராதமும் விதிக்கப்படும்” என்று கூறிய அவர், அமைச்சின் சுற்றறிக்கையை நினைவூட்டினார்.
“பிள்ளைகளை வளர்ப்பது அரசினுடைய பொறுப்பில்லை. அரசு பெற்றோருக்கு உதவ முடியும், ஆனால் பெற்றோரது இடத்தை இட்டு நிரப்ப முடியாது”-என்றும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வன்முறைக் காட்சிகளை சமூகவலைத் தளங்களில் பரப்பிய இளையோரது கணக்குகளை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார்.
‘மைனர்கள்’ என்ற வகைக்குள் அடங்குபவர்களை நேரடியாக விசாரித்துச் சிறைத் தண்டனை வழங்குவதற்குச் சட்டத்தில் இடமில்லை என்றாலும், அத்தகையோருக்கு அபராதம் விதிக்கும் போது , அல்லது அவர்களை நன்னடத்தை நிலையங்களுக்கு அழைக்கும் போது,
அல்லது நீதிமன்றங்களுக்கு அழைக்கும் போது பொலீஸார் இளம் பிள்ளைகளது பெற்றோரையும் ஆஜராகுமாறு அழைக்கலாம். பிள்ளைகளோடு மன்றில் பிரசன்னமாக வேண்டியது பெற்றோரது கடமையும் பொறுப்பும் ஆகும். பிள்ளைகளோடு சமூகமளிக்கத் தவறும் பட்சத்தில் பெற்றோர் பாதுகாவலர்களுக்குக் குறைந்தது இரண்டு வருட சிறைத் தண்டனை, முப்பதாயிரம் ஈரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம். அதனை நினைவுபடுத்தும் சுற்றறிக்கை ஒன்றை நீதி அமைச்சு வெளியிட்டிருக்கிறது.