வலதுசாரி மேயரின் வீடு மீது பிக்-அப் வாகனத்தை மோதித் தாக்குதல்!

 படம் :தாக்கப்பட்ட மேயரின் வீட்டின் முன் பகுதி.

Kumarathasan Karthigesu-பாரிஸ்

மனைவி, குழந்தை காயம் அரசியல் மட்டம் அதிர்ச்சி பாரிஸ் புறநகரங்களில் வன்செயல்கள் தணிவு.

????இளையராஜா விழாவில் அரங்கம் நிறைந்த கூட்டம்.

பாரிஸ் நகருக்குத் தெற்கே அமைந்த லை-லே-ரோஸ் (L’Haÿ-les-Roses) என்ற நகரத்தின் மேயர் வன்சென்ற் ஜோன்புருனின் (Vincent Jeanbrun) இல்லத்தின் மீது பிக் அப் வாகனம் ஒன்றை மோதித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டுக்குத் தீ மூட்டப்பட்டும் உள்ளது.

சனி – ஞாயிறு நள்ளிரவு 01.30 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலின் போது மேயர் வீட்டில் தங்கியிருக்கவில்லை. அவர் நகர சபையில் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை கும்பல் ஒன்று தீப்பற்றும் திரவம் நிரப்பப்பட்ட வாகனத்தை வீட்டின் வாயில் கதவு மீது மோதிச் செலுத்தித் தாக்கியுள்ளது. வீட்டின் மீது வாண வெடிகளும் ஏவப்பட்டுள்ளன.

வீட்டில் அவரது மனைவியும் இரண்டு குழந்தைகளும் மட்டுமே உறக்கத்தில் இருந்துள்ளனர். பீதியடைந்த மனைவி குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வீட்டின் பின் பக்கமாக வெளியேற முற்பட்ட சமயம் காயமடைந்தார். பிள்ளைகளில் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. மேயர் வன்சென்ற் ஜோன்பிருன் (Vincent Jeanbrun) நாட்டின் பழமைவாதக் குடியரசுக் கட்சியைச்(Les Républicains party) சேர்ந்த முக்கிய பிரமுகர். அக்கட்சியின் பேச்சாளராகவும் விளங்குகிறார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி ஒருவர் மீதான இத்தாக்குதல் அரசியல் மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்சி வேறுபாடுகள் இன்றிக் கடுமையான கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது.

தாக்குதலாளிகள் தேடப்பட்டு வருகின்றனர். அவர்கள் மீது கொலை முயற்சிக் குற்ற விசாரணை தொடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் நிலைவரம் தொடர்பாக அதிபர் மக்ரோன் பிரதமர் உட்பட ஏழு அமைச்சர்களுடன் இன்று முன்னிரவு எலிஸே மாளிகையில் ஆலோசனை நடத்தினார் என்று அறிவிக்கப்படுகிறது.

????பாரிஸில் அமைதி

பாரிஸ் புற நகரங்களில் கடந்த சில தினங்களாக நீடித்த இளைஞர்களது வன்செயல்கள் மெல்லத் தணியத் தொடங்கியுள்ளன. பாரிஸ் செனித் இன்னிசை அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற  தென்னிந்திய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர்.

இளையராஜாவும் பிரபல இந்தியத் தமிழ்ப் பாடகர்களும் கலந்துகொண்ட அந்த மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி பாரிஸ் நகரின் 19 ஆவது நிர்வாகப் பிரிவில் லாவிலெத் பார்க்கில் (parc de la Villette) அமைந்துள்ள செனித் இன்னிசை மண்டபத்தில்(Le Zénith Paris) அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் நடைபெற்றது.

பொதுமக்கள் பெருமெடுப்பில் கூடுகின்ற பல இன்னிசை நிகழ்ச்சிகளும் பொது விழாக்களும் பாதுகாப்புக் காரணங்களுக்காக ரத்துச் செய்யப்பட்டிருக்கின்ற கலவர சூழ்நிலையில் இந்த உள்ளரங்க இசை நிகழ்ச்சியைத் திட்டமிட்டபடி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

பாரிஸ் பிராந்தியத்தில் பஸ் மற்றும் ட்ராம் போக்குவரத்துச் சேவைகள் தொடர்ந்து இன்றிரவும் நிறுத்தப்பட்டிருந்தன. இருபதுக்கு மேற்பட்ட நகரப்பகுதிகளில் இரவு நேர உள்ளூர் ஊரடங்கு உத்தரவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">