மக்ரோனின் ஜேர்மனி விஜயம் ஒத்திவைப்பு, மார்சேய், லியோன் நகரங்களுக்கு மேலதிக படைகள் விரைவு !

Kumarathasan Karthigesu-பாரிஸ்

துப்பாக்கி விற்கும் கடை உடைக்கப்பட்டுச் சூறை!!

பொலீஸ் வீரர்கள் நால்வர் சூட்டுக்கு இலக்காகிக் காயம்!!!

வன்செயல்களும் கலவரங்களும் ஐந்தாவது நாள் இரவைச் சந்தித்துள்ள நிலையில் மார்சேய்(Marseille) லியோன் (Lyon) ஆகிய இரண்டு முக்கிய பெரிய நகரங்களில் நிலைவரம் மேலும் மோசமடையலாம் என்று அஞ்சப்படுகிறது. நகர முதல்வர்கள் விடுத்துள்ள அவசர வேண்டுகோளை அடுத்து இரண்டு நகரங்களுக்கும் கூடுதல் கலகத்தடுப்புப் படையினர் கவச வாகனங்கள் சகிதம் விரைந்து அனுப்பப்பட்டுள்ளனர் .

மார்சேய் நகரில் நேற்றிரவு வர்த்தக நிலையங்களை உடைத்து நாசம் விளைவித்த இளவயதுக் கும்பல்கள், அங்குள்ள துப்பாக்கி விற்பனைக் களஞ்சியம் ஒன்றையும் உடைத்துத் துப்பாக்கிகளைச் சூறையாடியுள்ளனர்.

வேட்டைத் துப்பாக்கி ஒன்றுடன் சிறுவன் ஒருவனைப் பொலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். நேற்றிரவு மட்டும் நாடெங்கும் வன்முறைகளில் ஈடுபட்ட ஆயிரத்து 300 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, Vaulx-en-Velin (Rhône),என்ற இடத்தில் ஏழு பேரடங்கிய கலகத் தடுப்புப் பொலீஸ் படை வீரர்கள் மீது மறைந்திருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அதில் நான்கு வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

நாஹெலின் உடல் அடக்கம்

நொந்தேர் நகரில் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நாஹெலின் உடல் இன்று அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடைபெற்ற மதச் சடங்குகளை அடுத்து Mont-Valérien இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. தனிப்பட்ட நிகழ்வாக – ஊடகங்களது வெளிச்சம் இன்றி- இறுதிச் சடங்கை அமைதியாக நடத்த உதவுமாறு குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். எனினும் உடல் அடக்கம் நிறைவடைந்த பின்னர் அந்தப்பகுதியில் பதற்றம் நிலவியது.

நாஹெல்(Nahel) கடந்த செவ்வாயன்று போக்குவரத்துப் பொலீஸார் ஒருவரால் அவனது காருக்குள் வைத்தே நெஞ்சில் சுடப்பட்டு உயிரிழந்தமை தெரிந்ததே. அந்த சம்பவத்தின் காட்சிப் பதிவு ஒன்று சமூக இணைய ஊடகங்களில் வெளியாகி வைரலாகியதை அடுத்து பாரிஸின் புற நகரங்களில் வெடித்த இளைஞர்களது வன்செயல்கள் நாடு முழுவதும் பரவியிருக்கின்றன. பாடசாலைகள் உட்படக் கண்ணில் பட்ட அனைத்தையும் எரித்தழிக்கின்ற வன்மம் பதின்ம வயதினரிடையே தீவிரமடைந்திருப்பது நாட்டின் பல்லின சமூகங்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதேவேளை – அதிபர் மக்ரோன் ஜேர்மனிக்கு மேற்கொள்ளவிருந்த அரசு முறைப் பயணத்தை நாட்டு நிலைவரம் காரணமாக ஒத்தி வைத்திருக்கிறார்.

உள்நாட்டு நிலைவரம் காரணமாக  அரசுத் தலைவர் அடுத்த சில தினங்கள் நாட்டில் தங்கியிருப்பதற்கு விரும்புகிறார். அதனால் இரண்டு நாடுகளது தலைவர்களினதும் இணக்கத்துடன் அவரது விஜயம் ஒத்திவைக்கப்படுகிறது – என்ற தகவலை எலிஸே மாளிகை இன்று வெளியிட்டுள்ளது.

மக்ரோன் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை ஜேர்மனியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருந்தார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">