பதின்ம வயதினர் வீதிக்கு வராமல் தடுப்பது பெற்றோரது பொறுப்பு! – மக்ரோன்

Kumarathasan Karthigesu-பாரிஸ் 

நாடு அதனைக் கவனிக்க முடியாது என்கிறார் அவர், நெருக்கடி கால கூட்டத்தில் நாட்டின் நிலைமை ஆராய்வு.

வீதிகளில் கலவரங்களில் ஈடுபட்டமைக்காகக் கைதுசெய்யப்பட்ட வர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வயதில் மிகவும் இளையவர்கள். அத்தகையோரை வீதிக்கு வரவிடாமல் தடுத்து வீடுகளில் வைத்திருப்பது பெற்றோர்களது பொறுப்பு. தாய், தந்தையரது கடமையை நாடு செய்ய முடியாது.

-இவ்வாறு பெற்றோர்கள் மீது பொறுப்புச் சுமத்தியுள்ளார் அதிபர் மக்ரோன். தற்சமயம் இடம்பெற்றுவரும் வீதி வன்முறைகளில் 18 வயதுக்கும் குறைந்தவர்களே மிக அதிகளவில் ஈடுபட்டிருப்பது பரவலாக எங்கும் அவதானிக்கப்பட்டுள்ளது. 13 வயதான சிறுவன் ஒருவனைப் பொலீஸார் கைது செய்திருப்பதாக உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா தெரிவித்திருக்கிறார்.

அதிபர் மக்ரோன் பெல்ஜியத்தில் முக்கிய மாநாடு ஒன்றில் பங்குபற்றச் சென்றிருந்தார். மாநாடு முடிந்தவுடன் வழக்கமான செய்தியாளர் மாநாட்டை நடத்தாமலேயே அவர் நேற்று நண்பகல் அங்கிருந்து அவசரமாகப் பாரிஸ் திரும்பினார். அவரது தலைமையில் நெருக்கடி காலக் கூட்டம் ஒன்று எலிஸே மாளிகையில் நடத்தப்பட்டது.

பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட உயர்மட்ட அரசாங்கத் தலைவர்கள் அதில் கலந்துகொண்டனர். கடந்த இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட இரண்டாவது நெருக்கடிகாலக் கூட்டம் இதுவாகும்.

நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்து வன்முறைகளைக் கட்டுப்படுத்துமாறு வலதுசாரிக் கட்சிகள் அரசு மீது அழுத்தம் கொடுத்து வருகின்றன. எனினும் நேற்றைய கூட்டத்தில் அது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

கலவரங்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் வளங்களை மேலும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பது என்றே அங்கு தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர் களுக்குக் கருத்த தெரிவித்த மக்ரோன், பதின்ம இளைஞர் ஒருவரின் மரணம் பெரும் வன்செயல்களையும் அழிவுகளையும் நியாயப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டித்தார்.

பற்றியெரிகின்ற பிரச்சினையில் சமூக வலைத் தளங்களுக்கும் “குறிப்பிடத்தக்க பங்கு” உள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார்.

அல்ஜீரியாவைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பம் ஒன்றைச் சேர்ந்த பதின்ம வயது வாலிபர் ஒருவர் பாரிஸின் புறநகரில் வைத்துப் போக்குவரத்துச் சோதனையின் போது சுடப்பட்டு இறந்த சம்பவத்தின் எதிரொலியாகவே நாடெங்கும் பெரும் வன்முறைகள் வெடித்துள்ளன. நான்கு இரவுகளைத் தாண்டி நீடிக்கின்ற வன்செயல்கள் நகரப் புறக் கலவரங்களாக மாறிக் கட்டுப்படுத்த முடியாதவாறு நகரங்களுக்குப் பரவிவருகின்றன.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">