திருத்தந்தைக்கு ‘Cinema for Peace’ விருது வழங்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டு வரும் தனித்துவமான மனிதாபிமானப் பணிகளே இவ்விருதுக்குக் காரணம் – Jaka Bizilj

போரால் துயருறும் உக்ரைன் மக்களை ஆதரித்து வருவதற்காகத்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ‘அமைதிக்கான திரைப்பட’ (Cinema for Peace) விருது வழங்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் வழியாக உலகில் மதிப்புகள் மற்றும் மாற்றங்களை ஊக்குவிக்கும் ‘Cinema for Peace’ என்ற அனைத்துலக அமைப்பின் நிறுவனர், தலைவர், எழுத்தாளர், விளம்பரதாரர் மற்றும் தயாரிப்பாளருமான Jaka Bizilj அவர்கள் திருத்தந்தைக்கு இந்த விருதை வழங்கியுள்ளார்.

திருத்தந்தையின் சாந்தா மரியா இல்லத்தில் இந்த எளிமையான விருதை Bizilj, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்கினார் என்றும், அவர் குழந்தைகள் தொடங்கி உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஆதரவாகக் குரலெழுப்பி வருவதும், அவர் மேற்கொண்டு வரும் தனித்துவமான மனிதாபிமானப் பணிகளுமே இவ்விருதுக்குக் காரணம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வளவு பேருக்கும் நம்பிக்கை கொடுப்பவர் நீங்கள்தான் என்றும், உங்களுக்கு இந்த விருதை கொடுப்பதில் எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது என்றும் கூறிய Bizilj அவர்கள், இலட்சக்கணக்கான மக்கள் உங்களால் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும், நீங்கள் அம்மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுக்கிறீர்கள் என்றும் கூறினார்.