காவல்துறைக்குள் இனவெறி குறித்து பிரான்ஸ் அரசு கவனம் செலுத்த வேண்டும் – ஐ. நா.

Kumarathasan Karthigesu-பாரிஸ் 

மனித உரிமை ஆணையரது கருத்துக்கு பாரிஸ் கண்டனம்.

பிரான்ஸ் அதன் காவல்துறைக்குள் காணப்படும் இனவெறி மற்றும் இனப்பாகுபாடு குறித்துத் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

பாரிஸில் பதின்ம வயது இளைஞர் ஒருவர் பொலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கருத்து வெளியிட்டிருக்கின்ற ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரது பேச்சாளர் இவ்வாறு கேட்டிருக்கிறார்.

ஐ. நா. மனித உரிமை ஆணையாளரது இந்தக் கூற்றுக்குப் பாரிஸ் நிர்வாகம் உடனடியாகவே கடுந்தொனியில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

ஜெனீவாவில் இன்று வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐ. நா. மனித உரிமை ஆணையாளரது பேச்சாளர் ரவீனா ஷம்டாசானி(Ravina Shamdasani), பாரிஸில் இளைஞர் கொல்லப்பட்ட சூட்டுச் சம்பவம் குறித்து ஆணையாளரது கவலையை வெளியிட்டார். “சட்டத்தை அமுல்ப்படுத்துகின்ற துறையில் உள்ள இனவெறி மற்றும் இனப்பாகுபாடு போன்ற ஆழமான பிரச்சினைகளை நாடு தீவிரமாகக் கையாள வேண்டிய நேரம் இது” – என்று அவர் அப்போது கூறினார்.

பாரிஸில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் பற்றிக் குறிப்பிட்ட அவர் கூறியதாவது :

“தங்களது நோக்கங்களுக்காகப் போராட்டங்களைப் பயன்படுத்தும் சில பிரிவினர்களால் ஏராளமான கொள்ளைகளும் வன்முறைகளும் நடந்துள்ளன என்பதையும், பெரும் எண்ணிக்கையான காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர் என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம்”

“ஆர்ப்பாட்டங்களில் வன்முறைக் கும்பல்களது ஊடுருவல் தெளிவாகத் தெரிந்தாலும் காவல்துறையினர் சட்டபூர்வமான கொள்கைகள், பாகுபாடு காட்டாமை, முன்னெச்சரிக்கை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை எல்லா நேரங்களிலும் மதித்து நடப்பதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறோம். “-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">