“மகனைக் கொன்ற அந்த ஒருவரையே குற்றம் சாட்டுகிறேன் பொலீஸ் துறையைக் குறை கூறவில்லை!”

Kumarathasan Karthigesu-பாரிஸ் 

கொல்லப்பட்ட நாஹெலின் தாய் மௌனியா தெரிவிப்பு.

எனது மகனின் உயிரைப் பறித்த பொலீஸ் உத்தியோகத்தர் மீதே குற்றம் சுமத்துகிறேன். அதற்காகப் பொலீஸ் கட்டமைப்பு முழுவதையும் குறை கூறவில்லை.

போக்குவரத்துப் பொலீஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன் நாஹெலின்(Nahel M) தாயாராகிய மௌனியா ( Mounia) இவ்வாறு தொலைக்காட்சி(France 5) ஒன்றுக்குத் தெரிவித்திருக்கிறார். அவரது மகனது கொலை நாட்டின் நகரங்கள் பலவற்றை தீப் பற்றி எரியச் செய்துள்ள நிலையில், வன்முறைகளைத் தவிர்த்து அமைதி பேணுமாறு அந்தத் தாயார் உருக்கமான வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.

நான் பொலீஸார் மீது குற்றம் சாட்டவில்லை. எனது மகனைக் கொன்ற அந்தத் தனி நபர் மீதே குற்றம் சுமத்துகிறேன். எனது மகன் குற்றவாளியாக இருக்கலாம் ஆனால் வன்முறைவாதி அல்லன். அவனைக் காரில் இருந்து வெளியேற்றுவதற்கு அவருக்கு வேறு வழிகள் இருந்தன. எனினும் ஒரு சன்னம்.. நெஞ்சுக்கு நெருக்கமாக… அதனை என்னால் கற்பனைபண்ண முடியவில்லை. என் மகன் எனது உயிர். அவனைக் கொன்றவர் என்னைக் கொன்று விட்டார். சுட்டவர் மீது நீதித் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் புரிந்த செயல் தப்புத் தான் என்று எனக்கு நண்பர்களாயுள்ள பொலீஸார் பலர் என்னிடம் நேரில் கூறியுள்ளனர். -இவ்வாறு அந்தத் தாயார் தொலைக்காட்சிச் செவ்வியில் மேலும் கூறியுள்ளார்.

மருத்துவத் துறையில் பணிபுரிந்து வருகின்ற மௌனியாவினது 17 வயது மகனைக் காருக்குள் வைத்துச் சுட்டுக் கொன்றவர் எனக் கூறப்படுகின்ற பொலீஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொலையின் எதிரொலியாக நாடெங்கும் பெரும் வன்செயல்கள் கட்டவிழ்ந்துள்ளன.

உயிரிழந்த இளைஞனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட வெண்ணிற அமைதிப் பேரணி(marche blanche) நேற்றுமாலை நொந்தேர் நகரில் நடைபெற்றது. சுமார் ஆறாயிரம் பேர் அதில் பங்கேற்றிருந்தனர். பேரணியில் பொலீஸாருக்கு எதிரான கோஷங்கள் ஒலித்தன. “நாஹெலுக்கு நீதி வேண்டும்”(“Justice pour Nahel”) என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகளைப் பலரும் சுமந்துசென்றனர். அஞ்சலிப் பேரணி நிறைவடைந்த கையோடு பொலீஸாருக்கும் இளைஞர் குழுக்களுக்கும் இடையே புதிதாக அங்கு மோதல்கள் வெடித்தன.