பொலீஸ் சுட்டதில் இளைஞன் பலி! பாரிஸ் புறநகரெங்கும் வன்முறைகள் !
Kumarathasan Karthigesu-பாரிஸ் .
குடும்பத்துக்கு அரசு அனுதாபம் தெரிவிப்பு, மன்னிக்க முடியாதது என்கிறார் மக்ரோன்,
பாரிஸ் நகருக்கு மேற்கில் – நொந்தேர் (Nanterre) என்ற இடத்தில் நேற்றுப் பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ரீன் ஏஜ் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்துப் பாரிஸின் புற நகரங்களில் பொலீஸாருக்கு எதிராக வன்செயல்கள் வெடித்துள்ளன. தெருக்களில் நேற்று இரவு முழுவதும் நீடித்த வன்முறை மற்றும் தீ வைப்புச் சம்பவங்கள் இரண்டாவது இரவாக இன்றும் நீடிக்கின்ற ஆபத்து நிலைமை காணப்படுகிறது. பொலீஸார் முழு உஷார் நிலையில் உள்ளனர்.
வன்செயல்களைத் தடுப்பதற்காக சுமார் இரண்டாயிரம் பொலீஸார் புற நகரங்களில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
எம். நாஹெல் (Nahel M) என்ற 17 வயதான இளைஞரே சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அவர் அல்ஜீரியாவைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவர். சமைத்த உணவு விநியோகிக்கின்ற தொழிலில் (delivery driver) ஈடுபட்டுவந்த அந்த இளைஞனின் மரணம் நாடெங்கும் பலத்த உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. ஆத்திரமுற்ற இளைஞர் குழுக்கள் நொந்தேர் (Nanterre) நகரத்திலும் அண்டியுள்ள புற நகரங்களிலும் நேற்றிரவு முழுவதும் பொலீஸாரோடு மோதல்களில் ஈடுபட்டனர். கார்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் தீக்கிரையாகின. Asnières, Clichy, Colombes, Gennevilliers, Villeneuve-la-Garenne, Mantes-la-Jolie (Yvelines) போன்ற புற நகரங்களில் பொலீஸாரை நோக்கி எரிகுண்டுகள் மற்றும் வாண வெடிகளை ஏவித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பாரிஸுக்கு வெளியே துளூஸ் (Toulouse) லீல் (Lille) போன்ற நாட்டின் முக்கிய நகரங்களிலும் பொலீஸாருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.
பலியான இளைஞர் போக்குவரத்துப் பொலீஸார் வழிமறித்த சமயம் அதனைக் கணக்கில் எடுக்காமல் தனது காரை வேகமாகச் செலுத்திச் சென்றுள்ளார் என்றும் – காரைத் துரத்திச் சென்று வழி மறித்து நிறுத்தியபின்னரே மிக நெருக்கமாக வைத்துச் சுடப்பட்டுள்ளார் என்றும் – கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பரவிய ஒரு காணொலியில், பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் இளைஞரை நோக்கித் துப்பாக்கியை நீட்டுகின்ற காட்சி இடம்பெற்றுள்ளது. சிறிது நேரத்தில் வேட்டுச் சத்தம் கேட்கிறது.
சாரதி நெஞ்சில் சுடப்பட்ட நிலையில் கார் தொடர்ந்தும் வேகமாகச் செலுத்திச் செல்லப்பட்டு வழியில் மோதி நின்றுள்ளது. அவசர மீட்புப் பணியினர் சூட்டுக் காயத்துடன் இளைஞரை மீட்டெடுத்து முதலுதவிச் சிகிச்சை அளித்த போதிலும் அவர் உயிரிழந்துவிட்டார்.
இளைஞரை மிக நெருக்கமாக நின்றுசுட்டவர் எனக் கூறப்படும் பொலீஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஏற்படவிருந்த உயிராபத்தைத் தடுப்பதற்காவே சுட்டார் என்று அவர் கூறியிருக்கிறார்.
இளைஞர் செலுத்திச் சென்ற மஞ்சள் நிற பென்ஸ் கார் (yellow Mercedes) போக்குவரத்துக் குற்றச் செயல்கள் பலவற்றில் சம்பந்தப்பட்டது என்றும் அதனாலேயே அதனை நிறுத்திச் சோதனையிட முயன்றனர் என்றும் போக்குவரத்துப் பொலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞனின குடும்பத்தினரிடம் அரசு நேரில் அனுதாபம் தெரிவித்திருக்கிறது. மார்சேய் நகரத்துக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அரசுத் தலைவர் மக்ரோன், இளைஞர் உயிரிழந்த சூட்டுச் சம்பவம் தொடர்பாக அங்கு கருத்து வெளியிடுகையில் “மன்னிக்க முடியாதது” என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது கருத்து பொலீஸ் தொழிற் சங்கங்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொலீஸாரின் நடவடிக்கை பற்றி முறைப்படி விசாரணை செய்து தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பாகவே அதிபர் எழுந்தமானமாகத் தீர்ப்புக் கூறும் பாணியில் அவசரப்பட்டுக் கருத்து வெளியிட்டிருக்கிறார் என்று பொலீஸ் தரப்புகளில் அதிருப்தி எழுந்துள்ளது.