கோடை விடுமுறைக் காலப்பகுதியைக் குறைப்பது பற்றி அரசு விவாதிக்கும்!
Kumarathasan Karthigesu-பாரிஸ் .
மார்சேய் நகருக்குச் சென்ற மக்ரோன் அங்கு அறிவிப்பு.
பிரான்ஸில் கோடை விடுமுறைக் காலம் கிட்டத்தட்ட ஜூலை,ஓகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களையும் முழுமையாக உள்ளடக்கியது. ஏனைய பல ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரான்ஸில் மட்டும் தான் இவ்வாறு நீண்ட காலப்பகுதிக்கு பாடசாலைகள் மூடப்படுகின்றன. இது ஒரு மாற்றமுடியாத பாரம்பரியமாகத் தொடர்ந்து வருகிறது.
பாடசாலைக் கற்பித்தல் காலத்தையும் கோடை விடுமுறைக் காலத்தையும் அரசு மீள்பரிசிலனை செய்யவுள்ளது. அது தொடர்பாக விரைவில் பொது விவாதங்களைத் தொடக்கவுள்ளது என்று அதிபர் மக்ரோன் தகவல் வெளியிட்டுள்ளார்.
நீண்ட விடுமுறைக் காலம் கற்றலில் இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே ஓராண்டில் கற்பித்தல் காலம் எவ்வளவு என்பது தொடர்பாக விவாதம் ஒன்றைத் தொடக்குவதற்குக் கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது என்று அவர் அறிவித்திருக்கிறார்.
நாட்டிலே அதிகமாக வன்செயல்கள் தலையெடுத்துள்ள மார்சேய்(Marseille) நகரத்துக்கு விஜயம் செய்துள்ள அவர் அங்கு மாணவர் மத்தியில் கல்வியில் நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகள் பற்றி அங்குள்ள கல்விச் சமூகத்தினருடன் கலந்துரையாடியிருக்கிறார்.
அச்சமயத்திலேயே கோடை விடுமுறைக் காலத்தைக் குறைக்கின்ற உத்தேசத் திட்டம் பற்றிய தகவலை அங்கு அவர் வெளியிட்டார்.
சிறுவர்களிடையே நீண்ட கோடை விடுமுறைக் காலம் கல்வியில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட வாய்ப்பளிக்கின்றது. சிலர் விடுமுறைக் காலத்தில் வீடுகளில் அல்லது பிரத்தியேக வழிமுறைகளில் கற்றலைத் தொடர்கிறார்கள். வசதி குறைந்த புறநகரங்களில் பிள்ளைகள் விடுமுறைக்காலம் முழுவதையும் விளையாட்டில் மட்டுமே கழிக்கிறார்கள்.
இரண்டு மாதங்கள் விடுமுறையைக் கழித்துவிட்டு செப்ரெம்பரில் அவர்கள் வகுப்புகளுக்குத் திரும்புகின்றனர். பின்னர் நான்கு, ஐந்து வாரங்களில் அடுத்த தவணை விடுமுறைக்காலம் தொடங்குகிறது. இந்த இடைப்பட்ட ஒருமாத காலப்பகுதிக்குள் மிகுந்த கற்றல் சுமையைச் சந்திக்க நேரிடுகிறது. கல்வியாண்டின் குறுகிய ஆரம்ப நாட்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் மிகக் கடுமையான வேலைச் சுமையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகிறது – என்பதை அதிபர் அங்கு சுட்டிக்காட்டினார்.
கல்விப்போதனைக் காலத்தில் மாற்றம் செய்கின்ற உத்தேசத் திட்டம் உடனடியாக அடுத்த கல்வி ஆண்டில் நடைமுறைக்கு வந்துவிடாது என்பதையும் மக்ரோன் அங்கு கூடியிருந்தோரிடம் நினைவுபடுத்தினார். அதேசமயம் பாடசாலைகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்காக கல்லூரிகள் (colleges) திறந்திருக்கும் நேரத்தைப் படிப்படியாகக் காலை எட்டு மணியில் இருந்து மாலை ஆறு மணி வரையாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்ரோன் தெரிவித்திருக்கிறார்.