கனடா காட்டுத்தீயின் புகை மண்டலம் பிரான்ஸின் வான் பரப்புக்கு வந்து சூழ்கின்றது!
Kumarathasan Karthigesu-பாரிஸ் .
பாரிஸ் உட்பட நாடெங்கும் இந்தவாரம் வளி மாசுபாடு.
கனடாவில் கட்டுக்கடங்காமல் பரவி எரிகின்ற பெரும் காட்டுத் தீயினால் உருவான நுண்துகள் புகை மண்டலம் பல்லாயிரக்கணக்கான மைல்கள் தூரம் தாண்டி-அத்திலாந்திக் கடலைக் கடந்து-ஐரோப்பாவின் வான் பரப்பை வந்தடையத் தொடங்கியுள்ளது.
அயர்லாந்து, இங்கிலாந்து நாடுகளைக் கடந்து பிரான்ஸின் Brittany பிராந்திய வான்பரப்பினுள் பிரவேசித்துள்ள மாசுப் புகை நாட்டின் பெரும் பகுதி வான் மண்டலத்தில் குறிப்பாக பாரிஸ் பிராந்திய வான் பரப்பில் இன்று திங்கட்கிழமை இரவு முதல் பரந்து படர்ந்து காணப்படும் என்றும்- அது பெரும்பாலும் எதிர்வரும் வியாழன்-வெள்ளிக் கிழமைகளில் வளியில் தீவிரமான மாசுபாட்டை உருவாக்கும் என்றும் – வளிமண்டல அவதான நிலையத்தின் நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
ஐரோப்பிய கோப்பர்நிக்கஸ் வளிமண்டல சேவை (European Copernicus Atmosphere Service – CAMS)நிறுவனமும் காட்டுத் தீ மாசுப் புகை ஐரோப்பிய வான்மண்டலத்தினுள் பிரவேசிப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. இந்தப் புகையை வானில் வெற்றுக் கண்களால் காண முடியாது.
காட்டுத் தீயின் மாசுப் புகை காற்றில் கலப்பதால் சுவாசப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர். குறிப்பாக ஆஸ்மா போன்ற சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் அவதிப்பட நேரிடலாம்.
இந்த ஆண்டு கனடாவின் மேற்குப் பகுதிகள் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு மிக மோசமான காட்டுத்தீ அனர்த்தத்தைச் சந்தித்துள்ளன. கடந்த ஐனவரி முதல் அங்கு 7.4 மில்லியன் ஹெக்டேர் (7.4 million hectares) பிரதேசம் காட்டுத் தீயில் நாசமாகியுள்ளது.
கனடா இன்ரஏஜென்ஸி காட்டுத் தீ நிலையத்தின் (Canadian Interagency Forest Fire Center) தகவலின் படி, 470 இடங்களில் காட்டுத் தீ பரவியுள்ளது. அதில் 247 தீப் பகுதிகள் கட்டுப்பாட்டை மீறி எரிந்துகொண்டிருக்கின்றன. தலைநகர் மொன்றியல் உலகில் மிக மோசமாக வளி மாசடைந்த நகரம் என்ற இடத்தில் இருக்கிறது.
கனடாவில் இருந்து பரவிய காட்டுத் தீப்புகை நியூயோர்க் உட்பட அமெரிக்க நகரங்களிலும் பெரும் சூழல் மாசடைவை ஏற்படுத்தி உள்ளது.