இலங்கையில் தென்னாபிரிக்க பாணியிலான ஆணைக்குழு: அனைத்து தரப்பினரும் இணக்கம்.
இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே, அவர் இதனை அறிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க பாணியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை இலங்கையில் அமைப்பதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இந்த ஆணைக்குழு சில வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டதாகவும் தாம் அதிபராக பதவியேற்றதும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை தென்னாபிரிக்காவுடன் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜெனீவா மனித உரிமைகள் பேரவை விதித்துள்ள நிபந்தனைகளில் இதுவும் ஒன்றென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, தமிழ் அரசியல் தலைவர்கள் அரசியல் தீர்வு குறித்தும், அதிகார பரவலாக்கம் குறித்தும் கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாகவும் குறித்த கோரிக்கைகளை சாதகமான முறையில் அணுகுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் நாளைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு வார இறுதியில் இது குறித்து நாடாளுமன்ற விவாதங்கள் இடம்பெறும் என ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற நிதி குழுவிடம் குறித்த திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவற்றை தொடர்ந்து, இலங்கைக்கு கடன் வழங்கிய ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.