பரீட்சைகளில் ChatGPT பாவித்து ஏமாற்றி விடை எழுதும் பல்கலைக்கழக மாணவர்கள்!

Kumarathasan Karthigesu-பாரிஸ் .

ஆசிரிய உலகத்துக்குப் பெரும் சவாலாகின்றது செயற்கை நுண்ணறிவு.

கல்விஅறிவு என்பது மனித மூளைக்குச் சம்பந்தமில்லாத விடயமாக மாறி வருகிறது . இனிமேல் வகுப்பறையும் ஆசிரியர்களும் தேவையா என்ற திருப்பத்தில் கல்வி உலகம் பெரும் சவாலைச் சந்தித்து நிற்கிறது. எல்லாக் குழப்பங்களுக்கும் தீர்வைத் தேட உதவுகின்ற மனித அறிவையே பெரும் குழப்பத்துக்குள் தள்ளிவிட வந்திருக்கின்றது செயற்கை நுண்ணறிவு.(artificial intelligence).

மனித நுண்ணறிவா? செயற்கை நுண்ணறிவா? உலகெங்கும் குழப்பங்கள் தொடங்கிவிட்டன.

இனிமேல் உயர் கல்விப் பரீட்சைகளை மாணவர்கள் கடுமையாகக் கஸ்ரப்பட்டுப் படித்துத் தாங்களாகவே எழுதப்போகிறார்களா அல்லது எல்லாம் தெரிந்த இயந்திரம் விடை எழுதப்போகின்றதா?

பரீட்சைகளில் – குறிப்பாகப் பல்கலைக்கழக மட்டத் தேர்வுகளில்- மாணவர்கள் “சற்ஜிபிரி” (ChatGPT) என்னும் செயற்கை நுண்ணறிவு இணைய ரோபோக் கருவி மூலம் விடை எழுதி ஏமாற்றுகின்ற போக்கு அதிகரித்து வருகிறது. பிரான்ஸின் உயர் கல்வி நிறுவனப் பரீட்சைகள் பலவற்றில் இவ்வாறு முறைகேடாகப் பரீட்சை எழுதிய சம்பவங்கள் அடிக்கடிக் கண்டுபிடிக்கப்பட்டு மீள் பரீட்சைகள் நடத்தப்படுகின்றன.

சற்ஜிபிரி இந்தக் கருவிதான் தற்போது ஆசிரியர் உலகைப் பெரிதும் உலுக்கி வருகிறது. அந்த ஒன்லைன் ரோபோ (online robot) வழங்கும் செயற்கை நுண்ணறிவு மூலம் எந்தவொரு கேள்விக்கும் சில நொடிகளிலேயே பதிலளித்துவிட முடியும். பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பூர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சுமார் இருபது மாணவர்கள் சமீபத்தில் தொலைக் கல்விப் பரீட்சை (distance exam) எழுதுவதற்கு இதைப் பயன்படுத்திப் பிடிபட்டனர். ஜப்பானின் வரலாற்றை மையமாகக் கொண்ட எம்சிகியூ(MCQ) என்னும் பல தேர்வுக் கேள்வித்தாளுக்கு விடையளிக்க அவர்கள் சற்ஜிரிபியைப் பயன்படுத்தி ஏமாற்றியது தெரியவந்ததை அடுத்து அந்தப் பாடத்துக்கு மீள்பரீட்சை நடத்தப்பட்டது .

பல்கலைக்கழக மட்டப் பரீட்சைகள் வீடுகளில் இருந்தே தேர்வையும் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதுவதை அனுமதிப்பதால் பரீட்சார்த்திகள் மிக இலகுவாக இவ்வாறான ஏமாற்று மோசடியில் ஈடுபட்டுப் பரீட்சைகளில் சித்தியடைகிறார்கள்.

பிரான்ஸில் தலைசிறந்த பாரிஸ் சயன்ஸஸ்போ(Sciences-Po Paris) பல்கலைக் கழகம் உட்பட சகல பல்கலைக்கழகங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் சற்ஜிபிரி உட்பட சகல செயற்கை நுண்ணறிவு முறைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

உலகெங்கும் கூட இவ்வாறான தடைகள் உள்ளன. ஆனால் பரீட்சார்த்திகள் செயற்கை நுண்ணறிவை அணுகுவதைக் கண்டுபிடித்துத் தடுக்க முடியாது பல்கலைக்கழக நிர்வாகங்கள் தடுமாறி வருகின்றன.

செயற்கை நுண்ணறிவு இலகுவாகக் கையில் கிடைக்கையில் எதற்காகச் சொந்த அறிவைப் பயன்படுத்திச் சிரமமப்படவேண்டும் என்ற எண்ணம் இளைய தலைமுறையினரிடையே எழுகிறது. டென்மார்க்கில் இவ்வாறு சற்ஜிபிரி மூலம் ஏமாற்றிப் பரீட்சை எழுதிய சில உயர்கல்வி மாணவர்களிடம் அந்த நாட்டின் ரீவி 2 ஊடகம், நீங்கள் செய்வது சரியா என்று கருத்துக் கேட்டது. அவர்கள் அளித்த பதில்களில் சில :

“பரீட்சை விதிகளை மீறுகிறேன் என்பதை நான் முழுமையாக ஒத்துக் கொள்கிறேன். ஆனால் எதிர்காலம் இப்படித்தான் இருக்கப் போகின்றது”

“.. நான் ஏமாற்றுவது தெரியவந்தால் அதற்காக எனது சக மாணவர்களிடம் மன்னிப்புக் கோருவேன்…”

“பரீட்சையில் தேறினால் எனக்கு நல்ல வேலை கிடைக்கும் என்பதால் இதைச் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்..”

” சற்ஜிபிரி எனக்கு உதவுகிறது. கட்டுரை எழுதும் போது மூன்றில் ஒரு பங்கு முயற்சியை நான் எடுக்கிறேன். மிகுதியை அது செய்கிறது.. “

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">