புடினுக்கு எதிராக கூலிப்படை கலகம்! மொஸ்கோவில் டாங்கிகள் காவல்!!

Kumarathasan Karthigesu-பாரிஸ் .

தெற்கு நகரில் இராணுவ தலைமையகம் முற்றுகை.

ரஷ்யாவில் இராணுவத் தலைமைக்கும் அந்நாட்டின் சக்தி மிக்க தனியார் கூலிப்படைக்கும் இடையே உள்மோதல் வெடித்திருக்கிறது.

உக்ரைன் போரில் ரஷ்யப்படைகளின் அண்மைக்கால வெற்றிகளுக்குப் பின்னால் இயங்கி வந்த ‘வாக்னர்’ (Wagner) கூலிப்படை திடீரெனப் புடினின் இராணுவத் தலைமைகளுக்கு எதிராகக் கலகத்தில் இறங்கியுள்ளது.

அதனால் மொஸ்கோவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் கலகத்தைத் தூண்டுகிறார் என்று வாக்னர் கூலிப்படைத் தலைவர் மீது கிரெம்ளின் குற்றம் சுமத்தியுள்ளது. உளவுத் துறை அவர் மீது விசாரணையைத் தொடக்கியுள்ளது.

தலைநகர் மொஸ்கோவில் “பயங்கரவாதத் தடுப்பு ஏற்பாடுகள்” செய்யப்பட்டிருப்பதாக நகரின் மேயர் செர்ஜி சோபியானின்(Sergei Sobyanin) அறிவித்திருக்கிறார். நகரின் பல இடங்களிலும் கவச வானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நாட்டின் ஏனைய  சில பிராந்தியங்களிலும் காவல் அதிகரிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் தென்பகுதியின் முக்கிய மைய நகரமாகிய ரோஸ்டோவ்-ஒன்-டொனில் (Rostov-on-Don) உள்ள ராணுவத் தலைமையகத்தையும் வான் தளம் ஒன்றையும் வாக்னர் படைகள் இன்று சனிக்கிழமை காலை கைப்பற்றி நிலைகொண்டுள்ளன என்று அறிவிக்கப்படுகிறது. ரெலிகிராம் சமூகவலைத் தளத்தில் வெளியான ஒரு வீடியோவில், வாக்னர் படைத் தலைவர் ப்ரிகோஜின் (Prigozhin) தலைமையகத்தின் உள்ளே காணப்படுகிறார். ரோஸ்டோவ் நகரம் உக்ரைன் மீதான படை நடவடிக்கையில் முக்கியமான ஒரு பின் தளமாகும்.

வாக்னர் படைத் தலைவர் அங்கிருந்து வெளியிட்ட ஒரு வீடியோவில், தானும் தனது 25 ஆயிரம் வீரர்களும நாநாட்டுக்காக உயிர்விடத் தயார் என்று அறிவித்திருக்கிறார். பாதுகாப்பு அமைச்சர் நேரில் பேசுவதற்கு வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

வாக்னர் கூலிப்படையின் தலைவர் ப்ரிகோஜின் (Prigozhin) நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட வீடியோ பதிவுகளில் ரஷ்ய ராணுவம் பெரும் எண்ணிக்கையான தனது வீரர்களைத் தண்டனை வழங்கும் நோக்கில் கொன்று விட்டதாகக் குற்றம் சாட்டினார். உக்ரைனில் நடக்கின்ற போரில் சாதாரண ரஷ்ய மக்களுக்கு உண்மை மறைக்கப்படுகிறது என்று கூறிய அவர், ராணுவத் தலைமையை அகற்றும் நீதிக்கான பயணத்தைத் தொடக்கப்போவதாக அறிவித்தார்.

வாக்னர் தனியார் படை 25 வீரர்களைக் கொண்டது. அதன் தலைவர் ப்ரிகோஜின் அண்மைக்காலமாக உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய இராணுவத்தலைமை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.