புடினின் சமையலாளர் கிரெம்ளினின் முதல் எதிரியாகியது எப்படி?

Kumarathasan Karthigesu-பாரிஸ் .

வாக்னர் படையின் கிளர்ச்சி ஒரு புரட்சியின் தொடக்கமா?

வாக்னர் என்ற சிறிய கூலிப்படை ரஷ்ய வல்லரசை ஒரே நாளில் ஆட்டம் காணச் செய்தமை உலக அளவில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 61 வயதான அதன் தலைவர் எவ்ஜெனி ப்ரிகோஜின் (Yevgeny Prigozhin) அதிபர் புடினின் சொந்த இடமாகிய சென். பீற்றர்ஸ்பேர்க்கில் பிறந்தவர். இருவரும் சுமார் இருபது வருடங்கள் ஒன்றாக வளர்ந்தவர்கள். ப்ரிகோஜின் இளம் வயதில் கிறிமினல் குற்றங்கள் புரிந்து சிறைசென்றவர்.

சிறையில் இருந்து மீண்ட பிறகு சென். பீற்றர்ஸ்பேர்கில் “ஹொட் டோக்ஸ்”(hot dogs) உணவு விற்பனை செய்யும் “கொன்கோர்ட்” என்ற விநியோக வலையமைப்பைத் தொடக்கினார்.

சில ஆண்டுகளில் அது மிகப் பெரிய வளர்ச்சி கண்டது. 1990 களில் அவரது உணவகமே கிரெம்ளின் மாளிகைக்கு உணவு வழங்கி வந்தது.

அதனால் “புடினின் சமையலாளர்” (Putin’s chef”) என்ற பட்டப் பெயரில் அழைக்கப்பட்டார்.

வாக்னர் குழு (Wagner Group) என்று அழைக்கப்படுகின்ற (officially called PMC Wagner) துணைப்படை 2014 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அச்சமயம் அது சுமார் ஐயாயிரம் வீரர்களுடன் ஒரு சிறிய குழுவாக விளங்கியது. சிரியா, உக்ரைனின் கிழக்குப் பகுதி மற்றும் சில ஆபிரிக்க நாடுகளில் தலைமறைவாகச் செயற்பட்டு வந்தது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் பிறகே வாக்னரின் பெயர் வெளியுலகில் பெரிய அளவில் அடிபடத் தொடங்கியது.

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப் படைகளது கட்டுப்பாட்டுப் பகுதியில் வாக்னர் செயற்படுவதாக நீண்ட பல காலமாகத் தகவல்கள் வெளியாகி வந்தபோதிலும் கடந்த ஆண்டிலேயே அதனை ரஷ்ய ஊடகம் ஒன்று முதல் முறையாக ஒப்புக் கொண்டு தகவல் வெளியிட்டது.

ஆரம்பத்தில் ராணுவத்தில் இருந்து வெளியேறியோர் மற்றும் ஓய்வு பெற்றவர்களை இணைத்துக் கொண்டு சிறிய குழுவாக இயங்கிய வாக்னர் படையில் தற்போது குறைந்தது 50 ஆயிரம் வீரர்கள் உள்ளனர் என்று மேற்கு நாட்டு உளவு அமைப்புகள் கூறுகின்றன. தம் வசம் 25 ஆயிரம் படை வீரர்கள் இருப்பதை அதன் தலைவர் ப்ரிகோஜின் உறுதிப்படுத்தியுள்ளார். உக்ரைனில் சண்டையிடுகின்ற அவரது படைவீரர்களில் எண்பது வீதமானோர் குற்றச் செயல்களுக்காக சிறைசென்ற “கிறிமினல்கள்” என்று அமெரிக்கப் பாதுகாப்பு அறிக்கை கூறுகிறது.

பாக்முட் உட்பட உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய பல சண்டைகளில் வாக்னர் குழு களத்தில் முன்னணியில் செயற்பட்டது. ப்ரிகோஜின் தலைமையில் ரஷ்யப் படைகள் பல வெற்றிகளை ஈட்டியபோது அவரது பெயர் சர்வதேச அளவில் பிரபலமாகியது. போர் முனைகளில் நின்றவாறு சமூக வலைத் தளங்களில் அடிக்கடித் தோன்றினார்.

வாக்னர் துணைப்படையின் ஆதரவு இன்றி ரஷ்யப்படைகளால் ஒர் அடியும் முன்நகர முடியாது என்றவாறாகக் கள நிலைவரம் ஒரு கட்டத்தில் தடித்த, அந்த மொட்டைத்தலை மனிதனான ப்ரிகோஜினுக்குச் சாதகமாக மாறியிருந்தது. அதேசமயம்

போரில் அவரது முக்கியத்துவம் ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சின் உயர் மட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. படைத் தளபதிகள் மத்தியில் அவருக்கு எதிர்ப்பு வளர்ந்தது.

உள்ளே உருவாகி வந்த முறுகல்கள் இரண்டு தரப்புப் படைகளும் ஒருவரை ஒருவர் தாக்கும் அளவுக்குச் சென்றுள்ளது. தன்னுடைய தளம் ஒன்றின் மீது ரஷ்யப்படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்திப் பெரும் எண்ணிக்கையான வீரர்களைக் கொன்றுவிட்டன என்று ப்ரிகோஜின் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். மொஸ்கோ அதனை மறுத்திருந்தது.

புடினுக்கு மிக நெருக்கமாக இருந்த  ப்ரிகோஜின், திடீரென அவருக்கு எதிராகப் பெரும் ஆயுதக் கிளர்ச்சியைத் தொடக்கியதன் மூலம் புடினின் முதல் தர எதிரியாக மாறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யத் தலைநகர் மொஸ்கோ நோக்கி முன்னேறிவருகின்ற ‘வாக்னர்’ கிளர்ச்சியாளர்கள் வழியில் வேரோனெஜ் (Voronezh) என்ற இரண்டாவது நகரத்தின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றிவிட்டனர் என்று ரோய்ட்டர் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. வேரோனெஜ் நகரம் மொஸ்கோவில் இருந்து 500 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது.

கிளர்ச்சிப் படைகள் மீது அந்தப் பகுதியில் ரஷ்யக் ஹெலிக்கொப்ரர்கள் கடும் தாக்குதலை ஆரம்பித்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் தென்பகுதி நகரங்கள் இரண்டை, ஒரு துப்பாக்கிச் சன்னத்தைக் கூடச் சுடாமல் – எதிர்ப்பின்றிக் – கைப்பற்றியுள்ளோம் என்று ப்ரிகோஜின் பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார்.

உக்ரைன் மீதான போரை வெறுக்கின்ற அதேசமயம் புடினுக்கு எதிரான மன நிலையில் இருக்கின்ற ரஷ்ய வீரர்கள் வாக்னர் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது கிரெம்ளின் அதிகாரத்துக்கு எதிரான ஒர் உள்நாட்டுப் போரின் அல்லது ஒரு புதிய புரட்சியின் ஆரம்பமாக அமையக்கூடும்.