பாரிஸ் வெடிப்புச் சம்பவம் : பெண் ஒருவரைக் காணோம்!
Kumarathasan Karthigesu-பாரிஸ் .
வாயுக்கசிவா?சதிவேலையா? பொலீஸ் குழுக்கள் களத்தில் 50 பேருக்குக் காயம். பாதிக்கப்பட்டோருக்கு மக்ரோன் அனுதாபம்.
அக்கடமிக் கட்டடத்தின் மேல் தளம் ஒன்றிலேயே வெடிப்பு நிகழ்ந்துள்ளது. கட்டடத்தின் முகப்புப் பகுதி இடிந்து வீழ்ந்து கற்குவியல்களாக உள்ளது. காணாமற்போன பெண் இடிபாடுகளில் சிக்குண்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. அங்கு இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடைபெற்ற போதிலும் வெடிப்பினால் பாதிக்கப்பட்ட அயல் கட்டடங்களின் பலவீனமான நிலையைக் கவனத்தில் கொண்டு அந்தப் பணிகள் தற்சமயம் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பாரிஸ் அமெரிக்கன் அக்கடமி பஷன் மற்றும் டிசைன் (l’école privée de design et de mode) தொடர்பான கற்கை நெறிகளைப் போதிக்கின்ற தனியார் பாடசாலை ஆகும். வெளிநாட்டு மாணவர்கள் பலர் அங்கு கற்கை நெறிகளைத் தொடர்கின்றனர். வெடிப்பு ஏற்படுவதற்கு முன்பாக அமெரிக்க மாணவர்கள் குழு ஒன்று அங்கிருந்து வெளியே சென்றதால் அவர்கள் அந்த அனர்த்தத்தில் இருந்து தப்பியுள்ளனர். அக்கடமி இயங்கிய குடியிருப்புக் கட்டடத்தில் இருந்து பலரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பெரும் தீயையும் சேதங்களையும் ஏற்படுத்திய அந்த வெடிப்புக்கு மூல காரணம் என்ன என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை. வெடிப்பு நிகழ்ந்த கையோடு அங்கு எரிவாயு வாடை வீசியதாக அயலவர்கள் கூறியிருந்தனர். எரிவாயுக் குழாய்களில் எங்காவது ஏற்பட்ட கசிவினால் வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அயலவர்களைப் பெரும் பீதிக்குள்ளாக்கிய இந்த வெடிப்புச் சம்பவத்தில் ஐம்பது பேர்வரை காயமடைந்திருப்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏழுபேருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிலருக்குச் செவிப்பறைப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெடிப்பின் அதிர்ச்சியையும் அங்கு எழுந்த தீப் புகையையும் நேரில் கண்டோர் அது விமானக் குண்டு வீச்சு என நம்பிப் பீதியடைந்தனர் என்று கூறியிருக்கின்றனர்.
பாரிஸ் அரச சட்டவாளர் அலுவலகம் இந்த அனர்த்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளைத் தொடக்கியுள்ளது. இரண்டு பொலீஸ் குழுக்கள் களத்தில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளன.
அதேவேளை, நகரின் வேறு இரு இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்ற அநாமதேய தகவல்கள் அன்றைய தினம் பாரிஸ் பொலிஸாருக்குக் கிடைத்திருந்தன என்றும் அதனால் இந்த வெடிப்புச் சம்பவம் நாசவேலையாக இருக்கக் கூடுமோ என்ற கோணத்தில் முதலில் நோக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குஅதிபர் மக்ரோன் தனது அனுதாபத்தை வெளியிட்டிருக்கிறார். இன்னிசைத் திருவிழாவை(Fête de la Musique) ஒட்டி எலிஸே மாளிகையில் புதன்கிழமை மாலை நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்ட அவர், தனது உரையின் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்தார். மீட்புப் பணியில் ஈடுபட்ட மருத்துவ மற்றும் தீயணைப்புச் சேவையினரைப் பாராட்டினார்.