“தேசத் துரோகம், முதுகில் குத்தும் செயல்” என்கிறார் புடின்!
Kumarathasan Karthigesu-பாரிஸ் .
காலையில் நாட்டுக்கு அவர் தொலைக்காட்சியில் உரை.
வாக்னர் படைத் தலைவரது பெயரைக் குறிப்பிடாமல்” இந்தக் கிளர்ச்சிக்குப் பின்னால் இருப்பவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்குவோம் “-என்றும் அவர் அறிவித்தார்.
வாக்னர் படைகளது கட்டுப்பாட்டில் வந்துள்ள ரோஸ்ரோவ் – ஒன்-டொன் (Rostov-on-Don,) என்ற தென்பகுதி நகரில் நிலைமை “குழப்பமாக” இருப்பதைப் புடின் தனது உரையில் ஒப்புக் கொண்டார்.
இதேவேளை – வாக்னர் தனியார் படைத் தலைவர் ப்ரிகோஜின், தங்களது நடவடிக்கையை “ஒரு சதிப் புரட்சி அல்ல, கிளர்ச்சியே” என்று அறிவித்திருக்கிறார். தந்தையர் நாட்டு மக்களுக்காக உயிரைக் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் ரஷ்யாவின் காவல் படைகளைத் தம்மோடு கைகோர்க்க வருமாறும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
அதேசமயம், ப்ரிகோஜினினைக் கைவிட்டு விட்டு வெளியேறுமாறு வாக்னர் படையின் வீரர்களுக்கு ரஷ்ய ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவர்களுக்குத் தண்டனையில் இருந்து விலக்களிக்கப் படும் என்றும் ராணுவம் கூறியுள்ளது.
மொஸ்கோ நகரில் இராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்தையும்ஆயுதம் தாங்கிய படையினர் நிலையெடுத்துக் காவல் புரிவதையும் காட்டுகின்ற தொலைக்காட்சிப் படங்கள் வெளியாகியுள்ளன. நகரில் பதற்றம் நிலவுகின்ற போதிலும் மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது.
அதேசமயம் தென்பகுதி நோக்கி இராணுவ வாகன அணிகள் புறப்பட்டுச் செல்வதால் பெருந்தெருக்களில் போக்குவரத்து நெருக்கடி காணப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிளர்ச்சிப் படைகளது கட்டுப்பாட்டில் வந்துள்ள ரோஸ்ரோவ் – ஒன்-டொன் (Rostov-on-Don,) தற்போதைய போரில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். உக்ரைன் படை நடவடிக்கைகளில் ரஷ்யக் கட்டளைப் பீடத்தின் ஒரு தந்திரோபாய மையம் (“A strategic place of the Russian command”)
அந்த நகரம் என்று பிரெஞ்சுப் படைத்துறை ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். இதேவேளை, ரஷ்யா நிலைவரத்தை மிக நெருக்கமாக அவதானித்து வருவதாகவும் எனினும் உக்ரைனுக்கு ஆதரவு வழங்குவதிலேயே பிரான்ஸ் அதன் முழுக்கவனத்தையும் செலுத்துவதாகவும் எலிஸே மாளிகை தெரிவித்துள்ளது.