திடீர்த் திருப்பம்! வாக்னர் படைகளை தளம் திரும்புமாறு ப்ரிகோஜின் உத்தரவு!

Kumarathasan Karthigesu-பாரிஸ் .

படம் :தலைநகர் மொஸ்கோ நோக்கி விரைந்த வாக்னர் துணைப்படை ராணுவ வாகன அணி.

இரத்தக் களரியைத் தடுக்க பெலாரஸ் நாடு சமரச முயற்சி.

ப்ரிகோஜின் ரஷ்யாவைவிட்டு வெளியேறுவார்!! அவருக்குத் தண்டனையிலிருந்து விலக்கு.

ரஷ்யாவில் வாக்னர் துணைப்படை ஆரம்பித்த திடீர் ஆயுதக் கிளர்ச்சி அற்ப ஆயுளில் முடிவடைந்துள்ளது . மொஸ்கோ நோக்கி முன்னேறி நகரின் விளிம்பு வரை வந்த தனது படை வீரர்களைத் தளங்களுக்குத் திரும்புமாறு வாக்னர் தனியார் படையின் தளபதி ப்ரிகோஜின் திடீரென உத்தரவிட்டிருக்கிறார். எவரும் எதிர்பாராத இந்த முடிவு பெலாரஸ் நாட்டு அதிபரது முயற்சியை அடுத்து இணக்கம் காணப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

தனது படைவீரர்களது முன்நகர்வுகளை நிறுத்துவதற்குப் ப்ரிகோஜின் இணங்கியுள்ளார் என்ற தகவலை பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ (Alexander Lukashenko) இன்று மாலை அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பு வெளியாகிய பின்னரே படைகளைத் தளம் திரும்பும் உத்தரவை ப்ரிகோஜின் விடுத்துள்ளார்.”பெரும் இரத்தக் களரியைத் தவிர்ப்பதற்காகவே” இந்த முடிவு எட்டப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

படம் :பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ (Alexander Lukashenko)

பெலாரஸின் சமரச முயற்சிகளில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் படி ஆயுதக் கிளர்ச்சியைக் கைவிட்டு வாக்னர் தலைவர் ப்ரிகோஜின் ரஷ்யாவில் இருந்து பெலாரஸ் நாட்டுக்கு வெளியேறுவார் என்றும் – புடின் அவர் மீது அறிவித்த தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்காகத் தண்டனைகளில் இருந்து விலக்களிக்கப்படுகிறது என்றும் –  ரஷ்ய அரச செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. வாக்னர் துணைப்படை வீரர்கள் விரும்பினால் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்துக்குள் கிரெம்ளினை அதிர வைத்த புடினின் சகாவான ப்ரிகோஜினின் ஆயுதக் கிளர்ச்சியின் எதிர்காலமும் அவரது கதியும் என்னவாகும் என்ற கேள்விகள் இதனால் எழுந்துள்ளன.

முன்னேறிய பகுதிகளில் இருந்து படைகளைத் திருப்பி அழைக்கின்ற இணைக்கப் பேச்சுக்களில் பெலாரஸ் அதிபர்- வாக்னர் தலைவர் மற்றும் அதிபர் புடினின் பிரதிநிதி ஆகிய முத்தரப்பினர் பங்குபற்றியிருந்தனர் என்று அறிவிக்கப்படுகிறது.

பல்லாயிரக் கணக்கான வாக்னர் படை கள் வண்டி வாகனங்களுடன் நேற்றிரவு உக்ரைனின் கிழக்குப் பகுதி ஊடாக எல்லை தாண்டி ரஷ்யாவின் மேற்குப் பகுதிக்குள் பிரவேசித்து அங்கிருந்து மொஸ்கோ செல்லும் நெடுஞ்சாலை வழியே முன்னேறத் தொடங்கின. ரஷ்ய ராணுவத் தலைமையைத் தூக்கி எறிவதற்கான நீதிக்கான பயணம் அது என்று ப்ரிகோஜின் அறிவித்திருந்தார்.

அவரது அந்த அதிரடி நடவடிக்கை கிரெம்ளினையும் சர்வதேச நாடுகளையும் அதிர வைத்திருந்தது.

படம் :மொஸ்கோ நகரில் காவலரண் நிறுவும் பணியில் இராணுவம்…

தென் பகுதியில் இரண்டு முக்கிய நகரங்களை எதிர்ப்பினறிக் கைப்பற்றிய வாக்னர் கிளர்ச்சிப் படை அங்கிருந்து மிக வேகமாக தலைநகரம் நோக்கி முன்னேறி வந்தது.

 

துணைப்படைகளது வருகையைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளை மொஸ்கோ நகரில் ரஷ்ய இராணுவம்  தீவிரமாக முன்னெடுத்திருந்தது. நகருக்குச் செல்லும் வீதிகளில் சோதனைச் சாவடிகளும் பதுங்கு குழிகளும் காவல் அரண்களும் நிறுவப்பட்டு வந்தன. நகர நிர்வாகம் திங்கட் கிழமையை விசேட விடுமுறை நாளாக அறிவித்தது. அவசர தேவைகள் தவிர்ந்த ஏனைய நடமாட்டங்களைத் தவிர்த்து விட்டு வீடுகளில் தங்கியிருக்குமாறு மொஸ்கோ வாசிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">