டைட்டானிக் கப்பல் அருகே நீர்மூழ்கியின் சிதைவுகள் கண்டுபிடிப்பு!

Kumarathasan Karthigesu-பாரிஸ் .

ஐவரின் கதி என்ன?

உலக நாடுகள் பலவற்றின் கூட்டு முயற்சியோடு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த பெருமெடுப்பிலான ஆழ்கடல் தேடுதல் பணி துயரமான கட்டத்தைச் சந்தித்துள்ளது.

ஐந்து பேருடன் கடந்த ஞாயிறன்று தொடர்பு இழந்து காணாமற்போன உல்லாச நீர் மூழ்கிக்கப்பலின் சிதைவுகளை அத்திலாந்திக் கடலின் அடியில் – டைட்டானிக் கப்பல் அருகே- கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்கக் கரையோரக் காவல்படையினர் அறிவித்திருக்கின்றனர்.

கடல் அடி ஆழத்துக்கு அனுப்பப்பட்ட தூரக் கட்டுப்பட்டில் இயங்கும் ரோபோ வாகனம் ஒன்றே (remote operated vehicle – ROV) நீர்மூழ்கியின் சிதைவுகள் எனக் கூறப்படும் பொருள்கள் பரந்து காணப்படுகின்ற பகுதியைப் படம் பிடித்துள்ளது. ஆழ்கடல் மீட்புப் பணி நிபுணர்கள் அந்தச் சிதைவுகளை உறுதிசெய்வதற்கான ஆய்வில் தற்சமயம் ஈடுபட்டுள்ளனர். முழுமையான விவரங்கள் இன்னும் சில மணி நேரங்களில் செய்தியாளர் மாநாட்டில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஓசியன்கேற் எக்ஸ்புளொரேசன்ஸ் (OceanGate Explorations) என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான “டைட்டன்” எனப் பெயரிடப்பட்ட சிறிய – மினி வான் அளவிலான – ஒரு நீர்மூழ்கியே ஐந்து பயணிகளுடன் காணாமற்போயிருந்தது .

அத்திலாந்திக் கடலில் 111 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளாகி மூழ்கிச் சமுத்திரப் படுக்கையில் கிடக்கின்ற புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை நேரில் சென்று பார்வையிட விரும்பும் செல்வந்தப் பயணிகளை அழைத்துச் செல்கின்ற திகிலூட்டும் உல்லாசப் பயணத்தை ‘ஓசியன்கேற் எக்ஸ்புளொரேசன்ஸ்’ அமெரிக்க நிறுவனம் ஏற்பாடுசெய்து வந்தது.

அந்த நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட நீர்மூழ்கியில் பயணம் செய்த ஐவரதும் கதி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. நீர்மூழ்கியினுள் சிக்குண்டுள்ள அவர்கள் ஐவரும் சுவாசிப்பதற்குத் தேவையான ஒக்சிஜனின் அளவு இன்று பகல் – பிரான்ஸ் நேரப்படி ஒரு மணி எட்டு நிமிடம் அளவில் – முற்றாகத் தீர்ந்துபோயிருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு அவர்கள் உயிர் பிழைத்திருப்பது “அதிசயம்” என்று நிபுணர்கள் கருதியிருந்தனர். எனினும் அவர்களது கதி குறித்து உத்தேசமான முடிவுகள் எதனையும் வெளியிட வேண்டாம் என்று உறவினர்கள் செய்தி ஊடகங்களை கேட்டிருக்கின்றனர்.

இங்கிலாந்து கோடீஸ்வரர் ஹாமீஸ் ஹாடிங்(Hamish Harding) மற்றும் பாகிஸ்தான் செல்வந்தர் ஷாஜதா தாவூத் (Shahzada Dawood) அவரது மகனான சுலேமான் (Suleman), பிரான்ஸ் பிரஜையாகிய ஆழ்கடல் சுழியோடியும் (deep-sea diver) கடல்சார் தொல்லியல் ஆய்வு நிபுணருமாகிய 77 வயதான போல்-ஹென்றி நர்ஜோலெ (Paul-Henri Nargeolet) மற்றும் நீர்மூழ்கிக் கப்பலுக்குச் சொந்தமான “ஓசியன்கேற் எக்ஸ்பெடிசன்ஸ்” (OceanGate Expeditions) நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஸ்ரொக்டொன் றுஷ் (Stockton Rush) ஆகிய ஐவருமே நீர்மூழ்கியுடன் காணாமற்போயிருந்தனர்.

அதேசமயம், நேற்று கனடா விமானம் ஒன்று கடலின் ஆழத்தில் இருந்து பதிவு செய்த ஒலிகள் காணாமற்போன நீர்மூழ்கியினுடையது அல்ல என்று தற்பொழுது தெரிவிக்கப்படுகிறது மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.