வெடித்துச் சிதறியது நீர்மூழ்கி! ஐவரும் பலி! உடல்களை மீட்பது சாத்தியமில்லை!!

Kumarathasan Karthigesu-பாரிஸ் .

துயரத்தில் முடிந்த டைட்டானிக் பயணம்.

“டைட்டான்” நீர்மூழ்கிக் கப்பல் சமுத்திரத்தின் ஆழத்தில் நீரின் அழுத்தம் காரணமாக வெடித்துச் சிதறியுள்ளது. அதில் பயணம் செய்த ஐவரும் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். கடலடியில் மீட்கப்பட்ட சிதைந்த பாகங்கள் நீர்மூழ்கியினுடையதே என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.”பேரழிவை ஏற்படுத்தும் வெடிப்பு”(“catastrophic implosion) நிகழ்ந்திருப்பதை மீட்கப்பட்ட பாகங்கள் காட்டுகின்றன. ஐவரது உடல்களையும் மீட்க முடியுமா என்பதை என்னால் தீர்க்கமாகக் கூற முடியாது. ஆயினும் தேடுதல் பணிகள் இன்னும் 24 மணிநேரத்துக்கு நீடிக்கும்.

நீர்மூழ்கி வெளி உலகத் தொடர்பை இழந்து காணாமற்போனமைக்கு என்ன காரணம் என்பது தெரியாது. அந்த மர்மம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறும்.

-அமெரிக்கக் கரையோரக் காவல் படையின் ரியர் அட்மிரல் மொஹர்(Rear admiral Mauger) சற்றுமுன் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் மேற்கண்ட தகவல்களை அறிவித்தார். உயிரிழந்தவர்களது உறவுகளுக்குக் கரையோரக் காவல்படை தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது – எனவும் அவர் கூறினார்.

கனடாவின் நியூபவுண்ட்லான்ட்டுக்குச் சற்றுத் தொலைவில் அத்திலாந்திக் சமுத்திரத்தின் ஆழத்தில் கிடக்கின்ற புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலின் சிதைவுகளுக்குப் பயணித்த டைட்டான் என்ற சிறிய உல்லாச நீர்மூழ்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நீருக்கடியில் காணாமற்போனமை தெரிந்ததே. அதன் சிதைவுகளை சர்வதேச மீட்புப் படைகள் இன்று கண்டுபிடித்திருந்தன.

பயணிகள் ஐவரும் உயிரிழந்ததை நீர்மூழ்கியின் சொந்த நிறுவனமாகிய‘ஓசியன்கேற்’ உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, கடலில் பல்லாயிரக்கணக்கான அடி ஆழத்தில் நீர்மூழ்கிக்கு என்ன நடந்தது என்பது இவ்வாறு மதிப்பிடப்பட்டாலும் இன்னும் பல கேள்விகளுக்கு விடைகிடைக்கப் போவதில்லை என்று நிபுணர் ஒருவர் கூறியிருக்கிறார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">