பிரான்ஸ் நாட்டு கடல்சார் நிபுணரும் காணாமற்போன நீர்மூழ்கியில் பயணம்!

Kumarathasan Karthigesu-பாரிஸ் .

டைட்டானிக் சிதைவுகளை நெருங்கி ஆய்வுகள் நடத்த 35 தடவை சுழியோடியவர்!!

????ஆழ்கடலில் மறைந்த ஐவர் பற்றித் தகவலேதும் இல்லை.

 

அத்திலாந்திக் சமுத்திரத்தின் அடியில் டைட்டானிக் (Titanic) கப்பல் சிதைவுகளுக்கு அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரெனக் காணாமற்போன உல்லாச நீர்மூழ்கியில் பயணித்த ஐவரில் ஒருவர் பிரெஞ்சுப் பிரஜை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் தேசிய கடற்படை வீரரும் ஆழ்கடல் சுழியோடியும் (deep-sea diver) கடல்சார் தொல்லியல் ஆய்வு நிபுணருமாகிய 77 வயதான போல்-ஹென்றி நர்ஜோலெ (Paul-Henri Nargeolet) காணாமற்போன நீர்மூழ்கியில் பயணித்துள்ளார் என்பதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.

ஆழ்கடலடி ஆய்வுப்பணிகளில் ஈடுபடுகின்ற “ஆர்எம்எஸ் டைட்டானிக்” (RMS Titanic) என்ற அமெரிக்கக் கம்பனியின் பணிப்பாளராகப் பணிபுரிந்து வருகின்ற அவர், டைட்டானிக் கப்பல் சிதைவுகளை நேரில் ஆய்வுசெய்வதற்காக அத்திலாந்திக் சமுத்திரப்படுக்கைக்கு சுமார் 35 தடவைகள் சென்று மீண்டவர். டைட்டானிக் கப்பலின் 5ஆயிரத்துக்கு மேற்பட்ட பொருள்களை மீட்கும் பணிகளை மேற்பார்வை செய்தவர். டைட்டானிக் கப்பல் சிதைவுகளுக்கான காப்புரிமையை வைத்திருக்கின்ற அவரது கம்பனி, டைட்டானிக் கப்பல் பொருள்களின் கண்காட்சிகளையும் நடத்திவருகின்றது.

போல் – ஹென்றி நர்ஜோலெ “மிஸ்டர் டைட்டானிக்” என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படுகிறார். டைடானிக் கப்பல் சிதைவுகள் தொடர்பாக அவர் எழுதிய ஒரு நூல் உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றிருந்தது. கடலுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் ஆழ் சமுத்திரத்தில் காணாமற்போயுள்ளார் என்ற செய்தி நாடு முழுவதும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவர் பயணித்த நீர்மூழ்கியைக் கண்டு பிடிப்பதற்காக பிரான்ஸின் கடல்சார் ஆய்வு நிறுவனம் (oceanographic Institute) ஆழ்கடலடித் தேடுதல் ரோபோ இயந்திரங்களை (deep-sea underwater robot) வட அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு அனுப்பியுள்ளது.

அதேசமயம், வெளியுலகத் தொடர்பு ஏதுமின்றி வட அத்திலாந்திக் சமுத்திரத்தில் காணாமற்போயுள்ள இலகு ரக உல்லாசப் பயண நீர்மூழ்கியைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. ஆழ்கடல் சமுத்திர அடித்தளங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடுகின்ற நிபுணத்துவம் வாய்ந்த சர்வதேச நிறுவனங்கள் சிலவும் நீர்மூழ்க்கியைத் தேடும் பணியில் இணைந்துள்ளன. அமெரிக்க கரையோரக் காவல் படை ஆழ் கடலில் சுமார் 7ஆயிரத்து 600 சதுர மைல்கள் பரந்த பிரதேசத்தில் மிகச் சவாலான தேடுதல் பணியை நடத்தி வருகிறது.

எனினும் நீர்மூழ்கி தொடர்பாக எந்தத் தகவலும் இன்னும் கிடைக்கவில்லை. நீர்மூழ்கியில் உள்ள ஐந்து பேரும் அடுத்த நாற்பது மணி நேரத்துக்குச் சுவாசிப்பதற்குத் தேவையான அளவு ஒக்சிஜனே அதில் உள்ளது என்ற அச்சமூட்டும் தகவலை இந்தச் செய்தியை எழுதும் சமயத்தில்

கரையோரக் காவல்படை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். அடுத்த நாற்பது மணி நேரத்துக்குள் நீர்மூழ்கியைக் கண்டுபிடித்து மீட்காவிட்டால் அதில் உள்ள ஐவரையும் உயிருடன் காண முடியாது போகலாம் என்ற கவலை எழுந்துள்ளது.

படம் :நீர்மூழ்கியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் செல்வந்தர் ஷாஜதா தாவூத் (Shahzada Dawood) அவரது மகனான சுலேமான் (Suleman)

நீர்மூழ்கியில் பயணிக்கின்ற ஐவரில் இங்கிலாந்து கோடீஸ்வரர் ஹாமீஸ் ஹாடிங்(Hamish Harding) மற்றும் பாகிஸ்தான் செல்வந்தர் ஷாஜதா தாவூத் (Shahzada Dawood) அவரது மகனான சுலேமான் (Suleman) ஆகிய மூவரும் மட்டுமே டைட்டானிக் கப்பல் சிதைவுகளை நேரில் பார்வையிடுவதற்காகக் கட்டணம் செலுத்தி உல்லாசப் பயணத்தை மேற்கொள்பவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. நான்காவது நபரான ஹென்றி நர்ஜோலெ தனது வழக்கமான ஆழ்கடல் ஆய்வுப் பணி நிமித்தம் அடி ஆழத்துக்குச் சென்றிருந்தார். ஐந்தாவது நபர் நீர்மூழ்கிக் கப்பலுக்குச் சொந்தமான “ஓசியன்கேற் எக்ஸ்பெடிசன்ஸ்” (OceanGate Expeditions) நிறுவனத்தின்

நிறைவேற்று அதிகாரியாகிய ஸ்ரொக்டொன் றுஷ் (Stockton Rush) என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவித்தது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">