ஆழ்கடலடியில் டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்றோர் நீர்மூழ்கியுடன் மாயம்!
Kumarathasan Karthigesu-பாரிஸ் .
லண்டன் கோடீஸ்வரர் உட்பட ஐவரை தேடும்பணி தீவிரம்.
உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் (Titanic) கப்பலின் சிதைவுகளைப் பார்வையிடுவதற்காக உல்லாசப் பயணிகள் ஐவருடன் அத்திலாந்திக் சமுத்திரப் படுக்கைக்குப் பயணித்த நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று காணாமற்போயிருக்கின்றது.
அத்திலாந்திக் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நண்பகலுடன் நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. அதில் பயணிப்பவர்களுக்கு மேலதிகமாக 72 மணித்தியாலங்களுக்குப் போதுமான ஒக்சிஜன் கையிருப்பு மட்டுமே உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது நீர்மூழ்கியைத் தேடிக் கண்டுபிடிக்கின்ற பணியில் அமெரிக்கா, கனடா நாடுகளின் கரையோரக் காவல்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓசியன்கேற் எக்ஸ்பெடிசன்ஸ் (OceanGate Expeditions) நிறுவனத்தினால் இயக்கப்படுகின்ற உல்லாசப் பயணத்துக்கான நீர்மூழ்கி ஒன்றே இவ்வாறு காணாமற்போயிருக்கின்றது.
அத்திலாந்திக் சமுத்திரப் படுக்கையில் 12 ஆயிரத்து 500 அடி ஆழத்தில் கிடக்கின்ற டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைப் பார்வையிடுகின்ற – மிகப்பெரும் நிதிச் செலவிலான – இந்தப் பயணத்தில் ஈடுபட்டவர்களில் இங்கிலாந்து கோடீஸ்வரரும், டுபாய் அக் ஷன் அவியேஷன் (Action Aviation) நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியுமான ஹாமீஸ் ஹாடிங்கும் (Hamish Harding) ஒருவராவார்.
அத்துடன் பாகிஸ்தானைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் மற்றும் அவரது மகன் ஆகியோரும் நீர்மூழ்கியில் சிக்கியுள்ளனர்.
எட்டு நாள்களை உள்ளடக்கிய இந்தக் கடலடிப் பயணத்துக்கு ஒருவருக்கான கட்டணம் 2லட்சத்து 50 ஆயிரம் ($250,000) அமெரிக்க டொலர்கள் ஆகும்.
1912 ஆம் ஆண்டில் – அந்தக் காலப்பகுதியின் மிகப் பெரிய- உல்லாசக் கப்பலாகிய டைட்டானிக்,
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் (Southampton) இருந்து அமெரிக்காவின் நியூயோர்க்(New York) நோக்கிப் புறப்பட்ட அதன் கன்னிப் பயணத்தின் போது – அத்திலாந்திக் சமுத்திரத்தின் நடுவே-பனிப் பாறையுடன் மோதிக் கடலில் மூழ்கியது. அதில் பயணம் செய்த 2 ஆயிரத்து 200 பேரில் குறைந்தது ஆயிரத்து 500 பேர் அந்த அனர்த்தத்தில் உயிரிழந்திருந்தனர்.
பெரும் நிதிச் செலவிலான தேடுதல்களுக்குப் பின்னர் மூழ்கிய கப்பலின் சிதைவுகள் கடந்த 1985 ஆம் ஆண்டில் முதல் முறையாக அத்திலாந்திக் ஆழ்கடல் படுக்கையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
கனடாவின் நியூபவுண்ட்லான்ட் (Newfoundland) கரையில் இருந்து 600 கிலோமீற்றர்களாக தூரத்தில் சமுத்திரப் படுக்கையில் கிடக்கின்ற டைட்டானிக் கப்பல் சிதைவுகளைச் சென்று பார்ப்பதற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டது.