நுவரெலியா-மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் பலி
நுவரெலியா – பழைய கச்சேரி அமைந்துள்ள லெமனன் வீதி பகுதியில் 25 அடி உயர மண்மேடு சரிந்து விழுந்ததில் மண்ணுக்குள் புதையுண்டு இருவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று மாலை 04 மணிக்கு இடம் பெற்றுள்ள இந்த அனர்த்தத்தில் மரான்கொட மஸ்தெக எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பி.எம்.சி.ருக்ஷானா (வயது 21) மற்றும் கே.நிலந்த (வயது 42) ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நுவரெலியா வெடமன் வீதி இலக்கம் 7/2 என்ற முகவரியில் வசிக்கும் ரஞ்சித் பிரியந்த வீரசிங்க என்பவர் தனது விட்டுக்கு பின் பகுதியில் மண்மேடு ஒன்றை அகற்றி அங்கு விடுதி ஒன்றை அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளார்.
இதன்போது விடுதி அமைக்கும் பகுதியில் 25 அடி உயரமான பாதுகாப்பு மதில் ஒன்றை அமைக்க
மண்மேடை அகற்றும் பணியில் ஒன்பது பேர் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்த நிலையில் அகற்றப்பட்ட மண்மேடு சரிந்து விழுந்து இருவர் மண்ணில் புதையுண்டுள்ளனர்.
இவர்களை மீட்கும் பணியில் ஏனைய தொழிலாளர்களும், அப்பகுதி வாசிகளும் ஈடுப்பட்டுள்ளனர்.
சுமார் ஒன்றரை மணிநேரம் மண் அகற்றப்பட்ட நிலையில் மண்ணில் புதையுண்ட இருவரையும் சடலமாக மீட்டுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் சம்பவம் குறித்த விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்