படகு அனர்த்தத்தில் 80 குடியேறிகள் பலி! பல நூறுபேரைக் காணோம்!!

Kumarathasan Karthigesu-பாரிஸ் 

கிறிஸ் நாட்டின் அருகே கடலில் நேர்ந்த அவலம்

நூற்றுக்கணக்கான வெளிநாட்டுக் குடியேறிகளை ஏற்றி வந்த மீன்பிடிப் படகு ஒன்று கிறிஸ் நாட்டின் தென் பகுதிக் கடற்பரப்பில் கவிழ்ந்ததில் குறைந்தது 79 பேர் உயிரிழந்தனர். நூறுபேர் வரை மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமற்போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஜரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடும் நோக்கில் லிபியா வழியாகப் புறப்பட்ட சிரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆபிரிக்க, ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அந்தப் படகில் பயணித்துள்ளனர் என்பது உதவி கோரி விடுக்கப்பட்ட செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய எல்லைக் கண்காணிப்பு முகவரகமான ஃபுரொண்டெக்ஸின் (Frontex, the European Border Surveillance Agency) கண்காணிப்பு விமானம் ஒன்றே அந்தப் படகைக் கடந்த செவ்வாய்கிழமை மாலை முதன் முதலாகக் கடலில் கண்டுபிடித்தது.

பின்னர் சில மணி நேரத்தில் அது கிறிஸ் நாட்டின் தெற்கு கடலில் பெலபோனீஸ் தீபகற்பம் (Peloponnese peninsula) அருகே ஆழ் கடலில் மூழ்கிக் கொண்டிருப்பது அவதானிக்கப்பட்டது.

லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்தப் படகில் குறைந்தது 750 பேராவது பயணம் செய்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.சுமார் 75 குழந்தைகளும் அதில் இருந்துள்ளனர். பலர் படகின் அடித்தளத்தில் அடைக்கப்பட்டுப்பூட்டி வைக்கப்பட்டிருந்தனர் என்றும் கூறப்படுகிறது. ஆட்களைக் கடத்தும் கப்பல் முகவர்கள் கப்பலில் குழப்பம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக இவ்வாறு ஆட்களை அடைத்து வைப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.

கிறிஸ் கரையோரக் காவல் படையினரும் தொண்டுப் பணியாளர்களும் புதன்கிழமை காலை மிகப் பெருமெடுப்பிலான மீட்புப் பணியைத் தொடக்கினர்.கடும் கொந்தளிப்புக்கு மத்தியில் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 104 பேரை மீட்டனர். 78சடலங்கள்வரை கடலில் மிதப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முப்பதுக்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுக் கரைக்குக் கொண்டுவரப்பட்டன. படகில் 750 பேர்வரை பயணித்தனர் என்பதால் பல நூற்றுக் கணக்கானவர்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் என்றும் அதனால் உயிரிழப்பு எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் மீட்புப் பணியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

படகில் இருந்த எவருமே உயிர்காப்பு அங்கிகளை அணிந்திருக்கவில்லை. அவர்கள் கப்பல் மூழ்கும் கட்டத்திலும் உதவிகள் எதனையும் ஏற்க மறுத்துத் தாங்கள் எப்படியாவது இத்தாலி சென்றடைந்து விட வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தனர் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டோர் கூறியுள்ளனர். இதேவேளை, குடியேறிகளைப் படகில் கடத்தி வந்தவர்கள் என நம்பப்படுகின்ற எகிப்து நாட்டுப் பிரஜைகள் ஒன்பது பேரைக் கிறிஸ் அதிகாரிகள் கைதுசெய்திருக்கின்றனர்.

இந்த ஆண்டில் நிகழ்ந்த பெரும் குடியேறிகளது கடல் அனர்த்தம் என்று கூறப்படுகின்ற இந்தச் சம்பவத்தை அடுத்து கிறிஸ் அரசு மூன்று நாள்கள் தேசிய துக்கம் அறிவித்திருக்கிறது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">