கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதினைக் கண்டித்து லண்டனில் கண்டனப் போராட்டம்
தமிழர்களின் தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமைக்காக தாயகத்தில் தொடர்ச்சியாகப் போராடிவரும் தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மற்றும் ஏனைய தமிழ்ச்சமூக அரசியற் செயற்பாட்டாளர்களின் சட்டவிரோதமான கைது நடவடிக்கையைக் கண்டித்தும் சிறிலங்கா அரசால் தொடர்ந்து தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறையை எதிர்த்தும் பிரித்தானிய அரசை இவ்விடயத்தில் தலையிடக்கோரியும் பிரித்தானிய வெளியுறவுத்துறை அலுவலகத்திற்கு முன்பாக கண்டனப் போராட்டம் மாலை 2 மணி நடைபெற்றது.
காலத்தின் தேவை கருதி குறுகிய நேரத்தில் அழைப்பு விடுக்கப்பட்ட இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டு சிறீலங்கா அரசின் அடக்குமுறையை எதிர்த்து பிரித்தானியாவை இவ்விடயத்தில் உடனடியாக தலையிடுமாறும், இலங்கையின் தமிழர்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்துமாறும்இ இராணுவ புலனாய்வாளர்கள் தமிழ் அரசியல்வாதிகளின் அரசியல் செயற்பாடுகளில் தலையிடுவதை நிறுத்துமாறும், தமிழர் பகுதிகளில் நடைபெறும் அத்துமீறிய ஆக்கிரமிப்புகளை உடனடியாக நிறுத்துமாறும், தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறும் பல்வேறு கொட்டொலிகளை எழுப்பினர். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியத்தால் 07 அன்று வெளியிடப்பட்ட கண்டன ஊடக அறிக்கை தமிழிலும் ஆங்கிலத்திலும் வாசித்தளிக்கப்பட்டது.
தாயகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அவசரமாக முன்னெடுக்கப்பட்ட இக்கண்டனப் போராட்டத்தின் அவசியம் கருதி கலந்து கொண்டு வலுர்ச்சேர்த்த அனைத்து தமிழின உணர்வாளர்களுக்கும் ஈழத்தமிழர் பேரவை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.